சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் நெருக்கமான ஊடாட்டங்களை செய்திருக்கின்றோம். மகிந்த ராஜபக்ச 2005இல் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது ஆட்சியின் முதல் கட்டத்தில் அவருடன் நெருக்கமாக பணியாற்றினோம். அதேமாதிரியே பிரபாகரனுடனும் விடுதலை புலிகளின் தலைவர்களுடனும் ஒத்துழைத்து செயற்பட்டோம் என இலங்கை உள்நாட்டுப் போரின்போது கொழும்பு அரசாங்கங்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் அனுசரணை முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திய நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறியிருக்கிறார்.
உள்நாட்டில் ஆதரவை திரட்டக் கூடியதும் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறக்கூடியதுமான சமஷ்டி முறையே தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக இன்னமும் கருதப்படக்கூடியதாகும். இதுவிடயத்தில் சமஷ்டிமுறை எவ்வாறு செயற்படுகிறது என்பதற்கு இந்தியா மேலும் மனதில் பதியத்தக்க ஒருவகை மாதிரியாக விளங்குகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை ஊடகம் ஒன்றுக்கு டுவிட்டர் சமூகவலைத்தளம் ஊடாக நேர்காணல் ஒன்றை வழங்கிய அவர் ஒரு வெளிநாட்டவர் என்ற முறையில் இலங்கை அரசியலுக்குள் ஆழமாக செல்வதை தவிர்க்க வேண்டிய நிலையில் தான் இருப்பதாகவும் ஆனால் இலங்கை ஒரு சிக்கலான நாடு என்பதை கூறிவைக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை ஒரு தீவு. ஆனால், சிக்கல்கள் என்று வரும்போது அது ஒரு சமுத்திரம் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். சகல சமூகங்களும் ஒன்றுஒன்றை மதித்து நல்லிணக்கத்துடன் வாழ்ந்து சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.
இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 11வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இலங்கையின் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, இலங்கையின் சிறுபான்மையினத்தவர்கள் ஐக்கியப்பட்ட ஒரு நாட்டுக்குள் சுயாட்சிக்காகவும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளுக்காகவும் போராட வேண்டும். இந்திய உதாரணத்தை பின்பற்றி சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை வழங்குவதற்கு இலங்கைக்கு ஒரு வழி இருக்கிறது. ஆனால், சகல அரசியல் போராட்டங்களுமே அஹிம்சை வழியிலானதாக இருக்க வேண்டும்.
கேள்வி: போரை முடிவுக்கு கொண்டுவந்து சமாதானத்தை காண்பதற்கு ராஜபக்ச அரசாங்கத்துடன் நீங்கள் நெருக்கமாக செயற்பட்டீர்கள். அது பற்றி உங்களது தற்போதைய கருத்து என்ன?
பதில்: நோர்வே சமாதான அனுசரணை நாடு என்றவகையில் அந்த நேரத்தில் முக்கியமான சகல தலைவர்களுடனும் நெருக்கமாக பணியாற்றியிருக்கிறோம். சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் நெருக்கமான ஊடாட்டங்களை செய்திருக்கின்றோம். மகிந்த ராஜபக்ச 2005இல் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது ஆட்சியின் முதல் கட்டத்தில் அவருடன் நெருக்கமாக பணியாற்றினோம். அதேமாதிரியே பிரபாகரனுடனும் விடுதலை புலிகளின் தலைவர்களுடனும் ஒத்துழைத்து செயற்பட்டோம்.
கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வை காணமுடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: சமஷ்டி கட்சியை ஆரம்பித்த தமிழர்கள் ஆரம்பம் முதல் இருந்தே சமஷ்டி முறைக்காக போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறார்கள். அத்தகைய தீர்வே இன்னமும் பொருத்தமானது என்று நான் நினைக்கின்றேன். அதேவேளை, சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படக்கூடியதாகவும் உள்நாட்டில் பரந்தளவில் ஆதரவை திரட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சமஷ்டி முறை எவ்வாறு செயற்படுகின்றது என்பதற்கு நல்லதொரு வகை மாதிரியாக இந்தியா இருக்க முடியும்.
கேள்வி: உள்நாட்டு யுத்தத்தின் இறுதி காலத்தில் பாரதூரமான மனிதவுரிமைகள் இடம்பெற்றன. அதற்கு இன்னமும் பொறுப்பு கூறப்படவில்லை. அதுபற்றி உங்களது கருத்து என்ன?
பதில்: காணாமல்போன தங்களது சொந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தமிழர்கள் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும். மக்கள் எப்பொழுது, எவ்வாறு இறந்தார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட வேண்டும்.
கேள்வி: இறுதியாக இலங்கையின் உள்நாட்டுப்போர் பற்றியும் உங்களது சமாதான முயற்சியின் தற்போதைய நிலையையும் பற்றி உங்களது சிந்தனை என்ன?
பதில்: தமிழர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமான சமாதான ரீதியான இணக்க தீர்வொன்றுக்கு அரசாங்கமும் விடுதலை புலிகளும் இணங்குவதற்கு உதவ நாம் கடுமையாக பாடுபட்டோம். அந்த முயற்சிகளின்போது ஆயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டன.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக பெருமளவு அவலங்களுக்கு மத்தியில் எமது முயற்சிகள் தோல்வி கண்டன. நல்லிணக்கம் மற்றும் சகல சமூகங்களினதும் பாதுகாப்பை நோக்கி இலங்கை செயற்பட வேண்டிய தருணம் இது. பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களில் அக்கறை காட்ட வேண்டும்.