விக்னேஸ்வரனைத் திருத்தவே முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மீளவும் தெரிவித்துள்ளார்.
விக்கினேஸ்வரன் தனது நாடாளுமன்ற கன்னி உரையை ஆற்றி முடிந்த நிலையில் அதற்கு முதலில் போர்க்கொடி தூக்கியவர் இந்த மனுஷ நாணயக்கார ஆவார்.தற்போது மீளவும் விக்கினேஸ்வரனுக்கு எதிராக கருத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விக்னேஸ்வரனுக்கு ஒத்து ஊதுபவராக சபாநாயகர் இருக்கின்றார். இவ்வாறான நிலையில் விக்னேஸ்வரனை நாம் எப்படித் திருத்த முடியும்?” விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரையில் சர்ச்சைக்குரிய பகுதிகளை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் சபையில் வைத்து நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், சபாநாயகர் அது விக்னேஸ்வரனின் கருத்துச் சுதந்திரம் என்றுதெரிவித்து, உரையை நீக்க முடியாது என கூறியுள்ளார்.
இந்தத் துணிவில் விக்னேஸ்வரன் தனது உரையை நியாயப்படுத்தும் வகையில் மீண்டும் சபையில் எமக்குச் சவால் விட்டுப் பேசியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஒருவருக்கு சபையில் எந்த விடயத்தைப் பேசுவது என்று தெரியாமல் இருக்கின்றது. இவரையெல்லாம் முதலமைச்சராகத் தெரிவு செய்து பின்னர் அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த வடக்கு மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இலங்கையில் மீண்டும் இனக்கலவரத்தைத் தூண்டும் வகையில் விக்னேஸ்வரன் சபையில் உரையாற்றி வருகின்றார்.
வடக்கில் போர் இடம்பெற்று தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த காலத்தில் கொழும்பில் பாதுகாப்பாகத் தூங்கி எழுந்தவர்தான் இந்த விக்னேஸ்வரன். இவருக்குப் போரின் வலி தெரியாது. இப்படிப்பட்டவரை வடக்கு மக்கள் ஏன் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தார்கள் என்று எமக்குத் தெரியாமல் இருக்கின்றது.
எனவே சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து கருத்து வெளியிட்டால் பாரிய விளைவுகளை அவர் சந்திக்க வேண்டி வரும். அதனால் தமிழ் மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.