தற்போது முரண்டு பிடித்துக்கொண்டு எதிரெதிர் துருவங்களாக நிற்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தவாரம் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்ற போதிலும் தீர்வுகள் எதுவும் எட்டப்படாமல் நிறைவடைந்திருந்தது.
இந்த நிலையில் மீண்டுமொருமுறை இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் இரண்டுவார காலப்பகுதிக்குள் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க ஆகியோருக்கிடையில் குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.