வெளிநாட்டு தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் கட்டார் தொழில்துறை அமைச்சு 275 டொலர் மாதாந்த குறைந்தபட்ச சம்பளத்தை அறிமுகம் செய்திருப்பதோடு தொழிலாளர்கள் மாறுவதற்கான நடைமுறையும் இலகுவாக்கப்பட்டுள்ளது.
கட்டார் மக்கள் தொகையில் 90 வீதமாக இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நிலையை மேம்படுத்துவதில் குறைபாடு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஓக்டோபர் 16 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட புதிய சட்டங்களை அமுலாக்குவது தொடர்பில் தற்போதே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதில் தொழிலாளர் தமது தொழிலை மாற்றுவதற்கு ‘ஆட்சேபனை இல்லை’ என்ற சான்றிதழை பெறுவது நீக்கப்பட்டுள்ளது.
தவிர உள்நாட்டு பணியாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுநேர மாத தொழிலுக்கு குறைந்தது 1,000 ரியால் (275 டொலர்) சம்பளம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 1.30 டொலருக்கு நிகராகும்.
தவிர படுக்கை, தங்குமிடம் அல்லது உணவு மற்றும் தங்குமிடத்திற்காக மாதம் ஒன்றுக்கு மேலதிகமாக 800 ரியால் கொடுப்பனவை வழங்கவும் தொழில் வழங்குனர்கள் கோரப்பட்டுள்ளனர்.
புதிய குறைந்தபட்ச சம்பளம் ஆறு மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தற்காலிக சம்பளமாக மாதத்திற்கு 750 ரியால் (206 டொலர்) நிர்ணயிக்கப்பட்டிருந்தது.




















