இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மியான்மர் உட்பட 12 நாடுகளில் வலுவான இராணுவ தளங்களை அமைக்க சீனா திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பெண்டகர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.
அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன், அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தில், சீனா தொடர்பான இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் நேற்று 200 பக்க கொண்ட ஆண்டறிக்கை சமர்ப்பித்தது.
அதில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் மட்டுமின்றி, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, செஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா, மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் தனது இராணுவ தளங்கள், தளவாட உள்கட்டமைப்பை வலுவாக்க சீனா திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நாடுகளில் இராணுவத்தை நிறுத்தி, சீனா தனது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் நிலைநாட்ட விரும்புகிறது.
சீனா ஏற்கனவே கிழக்கு ஆப்ரிக்க நாடான டிஜிபூட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு இராணுவ தளம் அமைத்தது. இது, இந்திய பெருங்கடலில் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்ட செய்தது.
உலகளாவிய அளவில் இராணுவ தளங்களை அமைப்பதன் மூலம், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை சீனா உன்னிப்பாக கண்காணிக்க வாய்ப்புள்ளது.
இது அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு உதவக் கூடும். இதே போல், தனது பொருளாதார பாதை திட்டத்தின் மூலம், தனது மேற்கு, தெற்கு எல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனது நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை சீனா குறைத்து வருகிறது.
அதுமட்டுமின்றி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது இராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது.
தென் சீன கடல் பகுதிக்கு சீனா உரிமை கோருவதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே, தைவான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, தைவானை அச்சுறுத்தும் வகையில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போர் விமானங்களை அனுப்பி, சீனா மிரட்டி வருகிறது.
கடந்த 1998-ஆம் ஆண்டில் இருந்து சீனா, 6 நாடுகளுடன் 11 முறை எல்லை தகராறில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலில், சீனாவின் அக்சாய் சின் எல்லையை ஒட்டிய பகுதியை திபெத்தின் ஒரு பகுதி என்று உரிமை கோரி இந்தியாவுடன் சீனா எல்லை பிரச்னையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட டோக்லம் எல்லை பிரச்னைக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த 22 சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்பு எல்லையில் அமைதியை நிலை நாட்ட அருணாச்சல் எல்லையை இருதரப்பும் இணைந்து கண்காணிக்க முடிவு செய்தன. தற்போது வரை, இரு தரப்பிலும் இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.