சரசாலை- குருவிக்காட்டு சூழலில் ஆங்காங்கே பெருந்தொகையான மருந்தகக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அவ்விடத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயநிலை காணப்படுகிறது.
அண்மையில் சாவகச்சேரி பிரதேச சபையினரின் ஏற்பாட்டில் குருவிக்காட்டு பகுதியில் வீதியின் இருமருங்கும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்ட போதே பெருந்தொகையான வைத்தியசாலைக் கழிவுகள் அவ்விடத்தில் கொட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
ஒரே வகையைச் சேர்ந்த மருந்துப் போத்தல்கள் உள்ளிட்ட மருந்தகக் கழிவுகளே இவ்வாறு அவ்விடத்தில் இனங்காணப்பட்டுள்ளன.
இருப்பினும் அவ்விடத்திற்கு வந்த சுகாதார வைத்திய அதிகாரி மருந்தகக் கழிவுகள் அரச வைத்தியசாலையின் கழிவுகள் அல்ல என்பதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
சமுதாயக் காடான குருவிக்காட்டு பகுதியில் இவ்வாறான மருந்தகக் கழிவுகள் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர்கள் அச்சம் வெளியிட்டிருந்தனர்.