தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் வெற்றியடைந்த 3 பேருமே தனிப்பட்ட வாக்குகளால்தான் வெற்றியடைந்தார்கள். அப்படி பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இது பெரும் தோல்வி. வடக்கு கிழக்கிலேயே அதிக விருப்பு வாக்கை பிள்ளையான் பெற்றிருக்கிறார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய வெல்லக்கூடாதென வாக்களித்த மக்கள், இம்முறை கோட்டாவின் அணியிலிருந்த அங்கஜன், பிள்ளையானிற்கு வாக்களித்துள்ளனர். மக்களின் மாற்றம் ஏன் என்பதை ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
வடமராட்சி, மாலைசந்தையில் நேற்று முன்தினம் (2) தனது அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றியபோது இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது கடினமான தேர்தலாக இருக்குமென ஆரம்பத்தில் நாங்கள் நினைத்திருக்கவில்லை. அது எமது மூடத்தனம். ஏனெனில் 2018 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை போலவே இப்பொழுதும் முடிவுகள் வந்துள்ளன. அந்த அபாயச்சங்கை நாம் சரியாக கணிக்கவில்லை.அதேபோல இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் வந்துள்ளன.
உள்ளூராட்சி தேர்தலை போல்லாமல், பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வித்தியாசமாக வாக்களிப்பார்கள் என நினைத்திருந்தோம். அதில் உண்மையுள்ளது. ஏனெனில், கடந்த வருடம் நவம்பவரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். சஜித்திற்கு யாழ் தேர்தல் மாவட்டத்தில் 314,000 பேர் வாக்களித்திருந்தனர்.
சில மாதங்கள் கழித்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 112,000 பேர்தான் வாக்களித்துள்ளனர். 202,000 பேர் வேறு ஆட்களிற்கு வாக்களித்துள்ளனர்.
கோட்டாபய வெல்லக்கூடாதென சஜித்திற்கு வாக்களித்தார்கள் என ஊகிக்கிறோம். அதில் உண்மையுமுண்டு. ஆனால் இந்த தேர்தலில் கோட்டாபயவிற்கு சார்பான அணிகளிற்கு கிட்டத்தட்ட 100,000 மக்கள் வாக்களித்துள்ளனர்.
இது ஏன் என்ற பெரிய கேள்வி எழுகிறது. இது குறித்த பல வியாக்கியானங்கள் இனி வரும். வெளிக்காரணங்கள் பல இருக்கின்றன. உள் காரணங்கள்தான் எம்மை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என நான் கணிக்கிறேன். நாம் தோற்கடிக்கப்படவில்லை. நாங்களே தோற்றிருக்கிறோம்.
கட்சிக்குள்ளேயே இருந்த உட்பூசல்கள். இதுபோன்ற தேர்தலை நாங்கள் கண்டிருப்போமோ தெரியவில்லை. நேரடியாகவே தமது சொந்தக்கட்சி வேட்பாளர்களையே தோற்கடிக்க வேண்டுமென பகிரங்கமாக பிரஸ்தாபித்து நடந்த தேர்தல். அது எங்கள் கட்சியில் நடந்தது. இப்படியான நிலைமையில் 3 ஆசனங்களை பெற்றது ஒரு அபூர்வமான விடயம். அதிலேயும், எந்தெந்த வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டுமென உட்கட்சிக்குள்ளிருந்து சொல்லப்பட்டதோ, அந்தந்த வேட்பாளர்கள்தான் வெற்றிபெற்றுள்ளனர். அது நல்ல விடயம்.
என்னை தோற்கடிக்க வேண்டுமென்றும், என்னை ஆதரித்ததால் சிறிதரனை தோற்கடிக்க வேண்டுமென்றும் பிரச்சாரம் செய்தவர்களும், அப்படியான பிரச்சாரங்களிற்கு ஆதரவாக இருந்தவர்களும் தோற்றிருக்கிறார்கள்.
ஆனால், இது நாம் சந்தோசப்படும் நிலையல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் வெற்றியடைந்த 3 பேரையும் பார்த்தீர்களென்றால், தி.சித்தார்த்தன் தனிப்பட்ட வாக்குகளால் வெற்றிபெற்றவர். தந்தை மீதோ, அவர் மீதோ அபிமானம் கொண்டவர்களின் வாக்குகள். சிறிதரன் கிளிநொச்சியில் இருந்து அதிக வாக்குகளை பெற்றார். யாழ் நிர்வாக மாவட்டத்திலிருந்து 14,000 வாக்குகளைத்தான் பெற்றார். கிளிநொச்சியில் விழுந்ததும் அவருக்கென விழுந்த தனிப்பட்ட வாக்குகள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த தடவை எனக்கும் விழுந்த வாக்குகள் தனிப்பட்ட வாக்குகளாகத்தான் கருதப்பட வேண்டும். அந்த கோணத்தில் இருந்து பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் மோசமாக தோற்றிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும்.
இது சம்பந்தமான ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும். ஆனால் நடத்தப்படுகிற ஆய்வுகளும், பொதுவெளியில் காரணங்கள் சொல்லப்படுவதும் கூட உண்மையான ஆய்வுகளோ, உண்மையான கருத்துக்களோ கிடையாது. அவையும் புனையப்பட்டவையாகவும், வெவ்வெறு காரணங்களை கண்டுபிடிப்பதற்காகவும் செய்யப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்வியென்பது எதை சுட்டிக்காட்டுகிறது என்பதை நோக்க வேண்டும். கட்சிகள் வெல்வதும் தோற்பதும் சகஜம். ஆனால் சென்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் கடந்த தேர்தலில் வெற்றியடைந்த 18 தமிழ் உறுப்பினர்களில் 16 உறுப்பினர்களை கொண்டிருந்த கட்சி இப்படியான தோல்வியை சந்தித்தது ஏன் என்பதை கண்டறிய வேண்டும்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களிற்கு அப்பால் மக்கள் கட்சிக்கு வாக்களிக்காமல் வேறு திசைகளிற்கு ஏன் சென்றார்கள் என்பதை பார்க்க வேண்டும். அதிலும், தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகளிற்கு ஓரளவு வாக்குகள் சென்றிருக்கின்றன. ஆனால், எமக்கு அதிர்ச்சியூட்டுகின்ற விடயம், அப்படியாக செல்லாமல் ராஜபக்ச அணியுடன் சேர்ந்திருப்பவர்களிற்கு வாக்குகள் சென்றுள்ளன. யாழ் தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்றவர் அங்கஜன் இராமநாதன். வடக்கு, கிழக்கு முழுவதிலும் அதிகூடிய விருப்பு வாக்கை பெற்றவர் பிள்ளையான்.
எமது மக்களின் மனநிலை எப்படியாக மாறியிருக்கிறது. ஏன் மாறியிருக்கிறது. என்ன காரணம். அரசியல் தீர்வு ஒன்று ஏற்பட வேண்டுமென்றபதில் எமது மக்கள் குறியாக உள்ளனர். அதில் சலனமில்லையென்பது எனது நம்பிக்கை. அதிலே மாற்றமில்லை. ஆனால், அதைநோக்கி பயணக்கும் அதேவேளை எமது இருப்பு, அடிப்படை தேவைகள், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரங்கள் அத்தியாவசியமானவை. அதையும் நாம் கவனிக்க வேண்டுமென்ற சிந்தனை இப்பொழுது வலுப்பெற்றிருக்கிறது. இதை நாம் கவனிக்க தவறியதும் இன்னொரு காரணம். தேர்தல் பிரச்சார மேடையில் நாம் சொன்னோம், இதை பற்றி சிந்தித்திருக்கிறோம், மாற்று பொருளாதார திட்டங்களை ஏற்படுத்துவோம் என. ஆனால் அதை வாய்ப்பேச்சில்தான் மக்கள் கேட்டிருந்தார்கள். கண்டிருக்கவில்லை. அந்த விடயங்களில் நாங்கள் இப்பொழுது முன்னேறுகிறோம். மிக விரைவில் அப்படியான கட்டமைப்புக்களை உருவாக்குவோம்.