பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா இந்த மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பிருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017-ஆம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது.
அதன் படி, சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே 8 கிரவுண்டு இடத்தை சசிகலா பினாமி பெயரில் வாங்கி இருப்பதாக கூறி, அந்த இடத்தை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.
அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை சார்பில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த இடம் முடக்கப்பட்டு உள்ளது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இந்த இடம் மட்டுமின்றி சசிகலாவின் பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் சொத்துகளை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சசிகலா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறுகையில், வருமான வரித்துறையினர் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறாக உள்ளது.
இந்த பிரச்சனையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டை சசிகலாவின் பினாமி சொத்து என்று வருமான வரித்துறையினர் எப்படி சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை.
ஏனெனில், அந்த இடம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
இந்த இடம் 2013-2014-ம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சசிகலா பங்குதாரராக இருக்கிறார். ஒருவர் பங்குதாரராக சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்து, அவரது சொத்தாக எப்படி மாறும்? இந்தியாவில் எத்தனையோ கம்பெனிகள் உள்ளன. அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக சேருவார்கள். அப்படி சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்தை அவரது சொத்து என்று எப்படி கூற முடியும்?
ஒருவர் தான் செலவு செய்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றால்தான் வருமான வரித்துறையினர் நுழைய முடியும். இதில் பங்குதாரர் மீது தவறு என்றால் ரிஜிஸ்திரார் ஆப் கம்பெனி என்ற துறைதான் நடவடிக்கை எடுக்க முடியும். வருமான வரித்துறை அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கு சட்டம் இடம் கொடுக்காது. எங்களது பதிலை 90 நாட்களுக்குள் உரிய அதிகாரியிடம் சமர்ப்பிப்போம். அந்த பதிலை ஏற்காத பட்சத்தில் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம்.
நான் சசிகலாவின் வக்கீலாக சொல்ல விரும்புவது அவருக்கோ அல்லது எங்களுக்கோ இதுவரை வருமான வரித்துறை நோட்டீஸ் நகல் கிடைக்கவில்லை. சசிகலா இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலை நிலையை அடைந்துவிட்டார். அதற்கான சட்டப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம்.
கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று கர்நாடக சிறை விதியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
எனவே 43 மாத காலம் சிறைவாசம் முடிவடைந்து உள்ள சசிகலா, 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகை பெற தகுதி உடையவர் ஆகிறார். எனவே இந்த மாதம்(செப்டம்பர்) இறுதியில் அவர் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த மாதம் இறுதியில் வெளியில் வர வாய்ப்பிருப்பதாக செய்தி வெளியானதையடுத்து சசிகலாவின் ஆதரவாளர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.