காதல் திருமணம் செய்துகொண்டதால் மகள் உயிருடன் இருக்கும்போதே, அவரது தந்தை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டையை சேர்ந்தவர் ஜெயபால் – செல்வி தம்பதியர். இவர்கள் பெங்களூரில் குடும்பத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார்.
மகள் கீர்த்தனாவிற்கு திருமணம் முடித்து வைப்பதற்காக சொந்த ஊரான தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டி கிராமத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர். தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்த ஒருவரை மணமகனாக தேர்வு செய்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். திருமணத்திற்காக பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு, நகை மற்றும் பொருட்கள் அனைத்தும் வாங்கி வைக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் கடந்த புதன்கிழமை அன்று திருமணம் நடைபெறுவதாக உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியில் கிளம்பிய கீர்த்தனா வீடு திரும்பவில்லை. வெகுநேரமாக வரவில்லை என தெரிந்த குடும்பத்தார், அவரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது அவர்களுக்கு தங்களுடைய மகள் வேறு ஒரு பையனுடன் சென்று விட்டார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததன் அடிப்படையில், கீர்த்தனாவையும் கீர்த்தனாவை அழைத்துச் சென்றவரையும் அழைத்து போலீசார் விசாரிக்கும்போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை ஜெயபால் தனது மகள் இறந்து விட்டதாக கூறி, தனது சொந்த ஊரில் தன் மகள் கீர்த்தனா இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டியுள்ளார். மகள் உயிருடன் இருக்கும் பொழுதே வேறு ஒருவரை காதல் திருமணம் செய்ததால், தந்தையே கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டி இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது




















