லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஒரு மாதத்துக்குள் அங்கு மேலும் சுமார் 4,000 டன் அமோனியம் நைட்ரேட் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் கடந்த 5ஆம் தேதி குடோனில் வைக்கப்பட்டிருந்த 3000 கிலோ அளவிலான அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இதில் அந்நகரம் முழுவதும் நிலைகுலைந்ததோடு நகரத்தின் கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. இந்த கோர விபத்தில் 191 பேர் உயிரிழந்தனர். மேலும் 6000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதோடு மட்டுமின்றி சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
இதனிடையே இந்த விபத்தில் பெய்ரூட்டில் உள்ள பல மருத்துவமனைகளும் சேதமடைந்ததால் அங்கு மருத்துவமனை பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த விபத்தால் அந்நாட்டில் உள்ள 55 லட்சம் மக்களில் 50% பேர் உணவுப் பற்றக்குறையை சந்திக்க நேரிடும் என ஐநா எச்சரித்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் எதிர்காலம் குறித்த கவலைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமோனியம் நைட்ரேட் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அதே துறை முகத்தில் மேலும் சுமார் 4,000 டன்னுக்கும் அதிகமான அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் கைக்கப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
குண்டுவெடிப்பை தொடர்ந்து அங்குள்ள துறைமுகத்தின் எச்சங்களுக்கு மத்தியில் பணிபுரியும் பிரெஞ்சு மற்றும் இத்தாலிய இரசாயன வல்லுநர்கள் ஆபத்தான இரசாயனங்கள் கொண்ட 20 க்கும் மேற்பட்ட கொள்கலன்களை அடையாளம் கண்டுள்ளனர். அதன்படி மேற்கொண்ட ஆய்வில் தற்போது நான்கு கொள்கலன்களில் வைக்கப்பட்டிருந்த 4.35 டன் அமோனியம் நைட்ரேட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆபத்தான வேதிப்பொருளை அப்புறப்படுத்தும் பணிகளை ராணுவ வல்லுநர்கள் மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.




















