கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயில் அருகே இன்று பட்டாசு ஆலை வெடித்து சிதறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தின் போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெடிவிபத்து நிகழ்ந்த கட்டடத்தில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் இறந்துள்ளனர் என்றும், மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ.முருகுமாறன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 10 பேரிற்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் அதில் மேலும் இருவர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த வெடி விபத்தில் நாட்டுவெடி தயாரிப்பு ஆலை உரிமையாளர் காந்திமதி உட்பட 7 பேரே பலியாகி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்றமைக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
நடைபெற்ற துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் தொழில்துறை அமைச்சருக்கும், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனவும் தெரிவித்துள்ளார்.