கூட்டமைப்புக்குள் இருந்த சிலர் விடுதலைப் புலிகளையும், விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியதாலேயே கூட்டமைப்பு பாரிய தோல்வியைத் தழுவியது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றது. தோல்விக்கு எவை காரணம் என வெளிப்படையாகத் தெரிந்தும் தோல்விக்கான காரணங்களை குழு அமைத்துத் தேடி ஆராய்கின்றனர்.
தேர்தல் காலங்களில் கூட்டமைப்புக்குள் இருந்த சிலர் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப் போராட்ட இயக்கங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியதாலேயே கூட்டமைப்பு பாரிய தோல்வியைத் தழுவியது.
தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றியதாலும் பாரிய பின்னடைவை கூட்டமைப்பு சந்தித்துள்ளது. தோல்விகளையும் தவறுகளையும் ஏற்றுக்கொண்டு எதிர்காலம் நோக்கி முன்னேறவேண்டும். இல்லையேல் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையை விட மோசமாக மாறிவிடும்.
ரெலோ எங்கு உள்ளதோ அங்குதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும். கூட்டமைப்பில் இருந்து யாரும் பிரிந்து செல்லாம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிக்க முடியாது. அழிக்கவும் விடமாட்டோம்.
சஜித் பிரேமதாஸ போன்றோரை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரித்திருந்தனர். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மொழி ஆதிமொழி என உரையாற்றியமைக்கு எதிர்ப்புக்கள் கிளம்பின.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் யாருக்கு ஆதரவு அளித்தார்களோ அவர்களே அதிகளவில் எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.
ராஜபக்ச சகோதரர்களை விட சரத் பொன்சேகா, சஜித் தலைமையிலான எதிர்க்கட்சியினரே அதிக இனவாத கருத்துக்களை வெளியிட்டனர்.
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிரான துவேசத்தைத் தூண்டி வாக்கு வங்கியை அதிகரிப்பதே இவர்களது நோக்கம் என்பது வெளிப்படையாக தெரிந்தது.
ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்ததற்காகவும் சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் முன்னிலைப்படுத்துவதாலும் தெற்கில் பலத்த ஆதரவு பெருகியது. இதனை அவதானித்த எதிர்க்கட்சிகள் ராஜபக்ச சகோதரர்களின் வழிகளைக் கையாளத் தொடங்கியுள்ளன.
தமிழத் தேசியத்தின் விடுதலைக்காக போராடிய நாம் ஒன்றுபடவேண்டிய தேவை உள்ளது. கிழக்கு மாகாணத் தொல்லியல் செயலணியில் பௌத்த பிக்குகளும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளும் என முழுவதுமாக சிங்கள மொழி பேசுபவர்களே நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் தமிழர்கள் வந்தேறு குடிகள் என கூறுவதற்கான ஆதாரங்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் ஒன்றுபடாதுவிட்டால் தமிழர்கள் தேசிய இனமல்ல வந்தேறு குடிகள் என்பதை நிரூபித்து விடுவார்கள். தமிழத் தேசியக் கூட்டமைப்பு இதுவரை என்ன செய்தார்கள் எனக் கேட்டவர்கள் தற்போது நாடாளுமன்றம் வந்திருக்கின்றார்கள். இவர்கள் கூட்டமைப்பு செய்ததை விட மேலதிகமாக என்ன செய்துவிடப் போகின்றார்கள் என்பதை மக்கள் உணர்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


















