புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை உருவாக்க நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவில் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவரை நியமிக்குமாறு கோரி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கே உரிய பிரச்சினைகள் இருப்பது போன்று மலையக மக்களுக்கே உரிய பிரச்சினைகள் இருப்பதாக மனோ கணேசன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை உருவாக்க நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவில் மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர் ஒருவரை உள்ளடக்குவது நியாயமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக விசேட நிபுணர்கள் குழுவை நியமித்தமை சிறந்த விடயமாக கருதுவதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.


















