நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மோசடி செய்பவர்கள் யாரும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மோசடி செய்பவர்களையும் குற்றவாளிகளையும் தண்டிக்கும் அதிகாரம் தனக்கு இருந்தால், இன்று ஆளும் கட்சியில் பலர் இருக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மோசடி செய்பவர்கள் யாரும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார்கள்.
மேலும், அணிந்திருக்கும் ஆடை வெள்ளையாக இருந்தாலும் அவர்களது உள்ளங்கள் கருமையாகதான் காணப்படுகின்றது.
இப்போது எனது கருத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு எழும்பியவர்களில் பெரும்பாலானோர் நில மோசடி, வரிமோசடி மற்றும் அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர்களே ஆவர்.
1989ஆம் ஆண்டு சம்பவங்கள் நடைபெற்றிருந்தால் தண்டனை வழங்குவதற்கு 31வருடங்கள் இருந்தன. தண்டிக்கப்பட நாங்களும் விரும்புகின்றோம்.
தற்போது வாதிட்ட புதிய முகங்கள் தொடர்பாக எனக்கு பெரிதாக தெரியாது, ஆகவே பழைய முகங்கள் எழும்பினால் அவர்கள் தொடர்பாக என்னால் பல விடயங்களை தெரியப்படுத்த முடியும்.
தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ளது புதிய அரசாங்கம் அல்ல. சிறிய மாற்றங்கள் மாத்திரமே இந்த அரசாங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. நான் மேன்மையை அழிக்க விரும்பவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.