யாழில் பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் R.கேசவன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தில் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முழு வட மாகாணத்திலும் 3 வருடமாக இந்த கழிவகற்றல் விடயம் தொடர்பில் பேசி வருகின்றோம். ஆரம்பத்தில் இருந்து இந்த விடயங்களை மீளபார்க்க முடியாது. ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலகத்தினர் உள்ளுராட்சி மன்றத்தினர் இணைந்து தங்களுடைய பிரதேசங்களில் நடவடிக்கையெடுக்க வேண்டும். உதாரணமாக யாழ்ப்பாண மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டு வோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதேபோல் நல்லூர் கோப்பாய் போன்ற பிரதேசங்களில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக வேண்டும். அதாவது எங்கிருந்து குப்பைகள் கொட்டப்படுகின்றன என்பதை முதலில் அடையாளப்படுத்துங்கள். அதனை அடையாளம் கண்டு விட்டு உடனடியாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் போலீசாரின் உதவியுடன் அவர்களை கைது செய்யுங்கள். இதனை இலகுவாக கைது செய்ய முடியும். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பார்கள். அனைவருக்கும் விளங்கும். அதாவது யார் யார் குப்பை கொட்டுகிறார்கள் எந்தெந்த இடங்களில் குப்பை கொட்டப்படுகிறது என்பது.
ஒவ்வொரு கிழமையிலும் நீங்கள் இதனை செய்ய வேண்டும். மூன்று நாட்கள் இதற்காக ஒதுக்குங்கள். கட்டாயமாக இதனை கட்டுப்படுத்த முடியும். பொலித்தின் மற்றும் இதரகழிவுகளில் மட்டும்தான் இந்த டெங்கு பரவக் கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது. ஒவ்வொரு கிழமையும் இந்த வேலைத் திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிழமையும் செய்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
இவ் வருடம் நாங்கள் ஒரு மகிழ்ச்சியான விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். எமது யாழ் மாவட்டம் டெங்கு சிவப்பு எச்சரிக்கையில் உள்வாங்கப்படவில்லை. அந்த நிலைமையை தொடர்ச்சியாக பேணுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்த மாதங்களில் எமக்கு சிகப்பு எச்சரிக்கை வந்துவிடும். எனினும் இவ் வருடம் நமது மாவட்டம் அதற்குள் உள்வாங்கப்படவில்லை.
அதற்கு கொரோணா தாக்கம் இருந்தது தான் காரணம். கடந்த வருடம் சில பல்லாயிரக்கணக்கான தொற்று நுளம்புகள் பரவியதன் காரணமாக அதிக அளவில் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
முக்கியமாக ஒன்றை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளூராட்சி மன்றங்கள் ஒவ்வொரு கிழமையும் கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கெதிராக உடனடியாக அதிரடிப்படை மற்றும் போலீசார் உதவியுடன் கைது செய்து நடவடிக்கை எடுங்கள்.
அதேபோல் இந்த விடயங்களை ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.
குறிப்பாக கொரோணா காலத்தில் நாங்கள் இரண்டு விதமான கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றினோம். சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவினர் மூலம் எமது கட்டுப்பாட்டு நடவடிக்கையினை மேற்கொண்டோம். அதில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு சட்டம் நமக்கு முழுமையாக வெற்றியை தந்தது. எனினும் சுகாதாரப் பிரிவினரால் முக கவசங்களை அணியுங்கள், சமூக இடைவெளியினை பேணுங்கள் என நடை முறைப்படுத்தினோம். ஆனால் இன்று மக்கள் மத்தியில் நீங்கள் பார்த்தால் விளங்கிக்கொள்ள முடியும். எங்கேயாவது சமூக இடைவெளி பேணப்படுகின்றதா? அல்லது எங்கேயாவது மக்கள் மாஸ்க் அணிந்து வருகிறார்களா என்று.
டெங்கு கட்டுப்பாட்டு விடயத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் இணைந்து எதிர்வரும் காலத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த வேலைத் திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.


















