இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர், தமிழ் மக்கள் கூட்டணியில் இணையும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறார். இலங்கை தமிழ் அரசு கட்சியில் யாருடைய பிடி ஓங்கும் என்பதை பொறுத்தே அவரது எதிர்கால முடிவு அமையுமென அறிந்தது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெறாத குறிப்பிட்ட வேட்பாளர், எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் களமிறங்கும் முஸ்தீபில் உள்ளார்.
இதற்குள் தமிழ் அரசு கட்சியில் உருவாகியுள்ள மாவை- சுமந்திரன் அணி மோதலில், குறிப்பிட்ட பிரமுகர் மாவை அணியை தீவிரமாக ஆதரித்து வருகிறார்.
இரண்டு அணிகளும் கடந்த சில வாரங்களாக பகிரங்க கோதாவில் குதித்திருந்த நேரத்தில், இந்த முரண்பாட்டை சற்று அமைதிப்படுத்துவதை போல, அண்மையில் நீர்வேலிில் சுமந்திரன் வழங்கிய இரவு விருந்தில் மாவை கலந்து கொண்டார்.
இது மாவை அணியின் பிரமுகர்கள் பலரிற்கு பிடிக்கவில்லை. மாவையிடமே தமது பகிரங்க எதிர்ப்பை தெரிவித்தனர். தற்போது அந்த அணியின் பிரமுகர்கள் பலரிடம் நிச்சயமற்ற தன்மை தென்படுகிறது. மாவை சேனாதிராசா எந்த நேரத்திலும் கவிழ்த்து கொட்டிவிடுவார் என அவர்கள் கருதுவதாக தெரிகிறது.
விக்னேஸ்வரன் தரப்புடன் நேரடியாக பேச்சில் ஈடுபட்ட குறிப்பிட்ட பிரமுகர்- நீர்வேலி இரவு விருந்தின் முன்னரே அந்த பேச்சை ஆரம்பித்திருந்தார். எனினும், கட்சிின் செயற்குழு கூட்டத்தின் பின்னரே அவர் அணி தாவும் இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது.
கட்சியின் செயற்குழுவில் எம்.ஏ.சுமந்திரன் தரப்பின் கை ஓங்கினால் குறிப்பிட்ட பிரமுகர் உடனடியாக கட்சி தாவலாமென அறிய முடிகிறது.



















