யாழ்ப்பாணத்தில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவு விவகாரம் விஸ்பரூபம் எடுத்துள்ளது.
நல்லூர் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட சித்திபாத்தி இந்து மயானப் பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது இன்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடித்தது.
குடாநாட்டின் மருத்துவ கழிவகற்றல் விடயம் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனியார் வைத்தியசாலைகளின் மனித உடல் பாக கழிவுகள் அகற்றும் விவகாரம் நேற்று சர்ச்சையாகியிருந்த நிலையில், இன்று மருத்துவ கழிவு பொருட்கள் பொறுப்பற்ற விதமாக கொட்டப்பட்ட விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
இரவிரவாக கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
சித்திபாத்தி இந்து மயான பகுதியில் நேற்றிரவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, இன்று காலையில் நல்லூர் பிரதேசசபையின் உறுப்பினர்கள் அங்கு நேரில் சென்றனர்.
இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட பெரிய குழிக்குள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. முதல் பார்வையிலேயே அது அரச வைத்தியசாலையொன்றின் மருத்துவ கழிவுகளாக இருக்கலாமென பார்ப்பவர்களை ஊகிக்க வைக்கும் விதமாக இருந்தது.
நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் அங்கு நின்றபோதே, இரண்டு உழவு இயந்திரங்களில் மேலும் கழிவுகள் அங்கு கொண்டு வரப்பட்டன. உடைந்த பீங்கான்கன் மற்றும் எரியக்கூடிய பொருட்கள் அங்கு கொண்டு வரப்பட்டன.
மருத்துவ கழிவுகளின் மேல் அந்த பொருட்களை போட்டு எரித்தால், மருத்துவ கழிவுகளின் லேபள்கள் அகன்று, அந்த கழிவுகளை கொட்டிய நிறுவனம் எது என்பதை கண்டுபிடிக்க முடியாது என்ற நோக்கத்துடனேயே அந்த பொருட்கள் அங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.
கழிவுகளுடன் வந்தவர்களை விசாரித்ததில், அவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பக்கம் கையை காட்டினார்கள்.
தர்மேந்திரா என்பவரே இந்த கழிவகற்றல் செயற்பாட்டிற்கு பொறுப்பாக உள்ளார், அவரது அறிவுறுத்தலின் பேரில் கழிவுகளை ஏற்றி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியதில், நேற்று (10)இரவு 5 டிப்பர் கொள்ளவுடைய மருத்துவ பொருட்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டதாக தெரிய வந்தது. இரவிரவாக இயந்திரத்தால் குழி தோண்டி, மருத்துவ பொருட்கள் கொட்டப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அந்த பகுதியில் ஏற்கனவே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு, தடயம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளதாகவும் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
கையை விரித்த பொலிசார்
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நல்லூர் பிரதேசசபையினர் முறைப்பாடாக பதிவு செய்ய சென்றபோதும், அதை முறைப்பாடாக பதிவு செய்ய அவர்கள் மறுத்து விட்டதாக நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
இதன் பின்னர், ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏ9 பாதை முழுமையாக துண்டிக்கப்பட்டது.
இதன்பின்னர் யாழ் பொலிஸ் நிலைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார். போராட்டக்காரர்களை வீதியோரமாக போராடும்படி பொலிசார் கேட்டனர்.
இறுதியில் போராட்டக்காரர்களின் முறைப்பாட்டை எழுத்து மூலம் பெற்ற யாழ்ப்பாண பொலிசார், அது குறித்து நீதிமன்றத்தில் அறிவிப்பதாக தெரிவித்தனர்.
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடுமாறு நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த போதும், பொலிசார் அதை ஏற்கவில்லை.
இறுதியில் நல்லூர் பிரதேசசபையின் இரண்டு காவலாளிகள் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மலையுடன் மோதாதீர்கள்!
இந்த சர்ச்சையையடுத்து, நல்லூர் பிரதேசசபை செயலாளர் வடக்கு சுகாதாரத்துறை உயரதிகாரிகள் சிலருடன் பேசியதாகவும், அதன்போது செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக பதிலளிக்கப்பட்டதாகவும் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
உயரதிகாரியொருவர், “நீங்கள் மலையுடன் மோதப் போகிறீர்களா?“ என மிரட்டல் பாணியில் கேட்டதாக அவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.