நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தாமல் ஒருபோதும் அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க முடியாதென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரணில்-மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இன்னும் ஆட்சியில் இருந்திருந்தால் ஸ்ரீலங்கா நாடு சோமாளியாவை மிஞ்சியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை அமைப்பின் 2020ஆம் ஆண்டிற்கான கூட்டம் நேற்றைய தினம் மாலை கொழும்பின் புறநகரான பத்தரமுல்லையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் பேசிய அவர்,
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான எதிர்காலத்தை முன்னிறுத்திய தனது கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருக்கும் நிலையில், அது தற்போது ஒரு அரச ஆவணமாக மாறியிருக்கிறது. அதிலும் தேசிய பாதுகாப்பிற்கே முதலிடம் வழங்கப்பட்டிருக்கிறது.
தேசிய பாதுகாப்பு எனும்போது தீவிரவாத நடவடிக்கைகளை முறியடித்தல், வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டைப் பாதுகாத்தல், நாட்டிற்குள் எழத்தக்க பாதுகாப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், மதத்தின் கோட்பாடுகளைத் தவறாக அர்த்தப்படுத்தி அதன்மூலம் மக்களைப் பிழையாக வழிநடத்தும் செயற்பாடுகளைத் தோற்கடித்தல்,
இயற்கை அனர்த்த நிலைமைகளின் போது அதனால் ஏற்படும் அழிவுகளைக் கட்டுப்படுத்தல், கோவிட் – 19 வைரஸ் தொற்றுநோய்ப் பரவல் போன்ற நெருக்கடிகளின் போது அதனை முகாமை செய்தல் உள்ளிட்டவை தேசிய பாதுகாப்பிற்குள்ளேயே அடங்குகின்றன.
அண்மையில் கொரோனா வைரஸ் பரவலினால் பெரும் பாதிப்பிற்குள்ளான இத்தாலியைச் சேர்ந்த வைத்தியர்களும் தாதியர்களும் நாங்கள் இந்தப் போராட்டத்திலிருந்து பின்வாங்குகின்றோம் என்று அறிவித்தார்கள்.
எனவே பயங்கரவாதத்தின் போது மாத்திரமன்றி இத்தகைய சூழ்நிலைகளிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பே கேள்விக்குறியாகின்றது. ஆகவே தான் நாம் தொடர்ந்தும் அதற்கு முன்னுரிமை வழங்கி செயலாற்றி வருகின்றோம்.
கடந்த காலத்தைப் போன்று இன்னும் 4 – 5 வருடங்களுக்கு இந்த நாடு நிர்வகிக்கப்பட்டு இருக்குமானால், நிச்சயமாக இது ஒரு சோமாலியாவாக மாறியிருக்கும்.
அண்மைக்காலமாக பெருமளவான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.