அரசாங்கம் மட்டுமே தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு இனிமேல் அனுப்பும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட இராஜதந்திர ஒப்பந்தத்திற்கமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
தாதிகள் மற்றும் வேளாண்மைத் துறைகளில் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு ஸ்ரீலங்காவிலிருந்து தனியார் துறையால் அண்மையில் பலர் அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு அனுப்பப்படுபவர்களிடம் இருந்து ஸ்ரீலங்கா வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள், பெரும் தொகையை வசூலிக்கின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே இஸ்ரேல் அரசாங்கத்துக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் மேற்க்கொள்ளப்பட்ட இராஜதந்திர ஒப்பந்தத்திற்கமைய, எந்தவொரு தனியார் நிறுவனமும் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடியாது.
எனவே, ஸ்ரீலங்கா தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது தொடர்பான பிரசாரத்தால் ஏமாற வேண்டாம் என்று, பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த விடயத்தில் ஊடகங்களும் கவனம் செலுத்தும் என்று நாம் நம்புகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.