அஞ்சலி உரிமையையும் பறிக்கும் கோட்டாபய அரசின் இராணுவ ஆட்சி அணுகுமுறையை எதிர்கொள்வது எப்படியென்பதை ஆராய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இன்று ஒன்றுகூடினர்.
இந்த சந்திப்பில் பெரும்பாலான தமிழ் கட்சிகளிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும், அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகளில் இரண்டு தரப்புக்கள் புறக்கணித்தன. விக்னேஸ்வரன் வழக்கு விசாரணைக்காக கொழும்பில் தங்கியிருக்கிறார். அவரது கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் இந்த சந்திப்பை விரும்பவில்லை. அதுபோல அவரது கட்சியிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் சந்திப்பை விரும்பவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
சிவாஜிலிங்கம் பொலிசாரின் பிடியில் இருப்பதால் தமிழ் தேசிய கட்சியும், திலீபன் அஞ்சலி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்ததால் மணிவண்ணன் தரப்பும் கலந்துகொள்ளவில்லை.
இன்றைய சந்திப்பில் அனைத்து தரப்பும் ஓரணியாக திரள்வது குறித்து ஆராயப்பட்டது.
அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு வடக்கு கிழக்கு தழுவியரீதியில் ஒரு ஜனநாயக வழி போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டம் என்ன? எப்படி அமைய வேண்டும் என்பதை அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் ஆராய்ந்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகள், பல்கலைகழக சமூகம், வர்த்தர்கள், மதகுருமார், பொதுஅமைப்புக்களை உள்ளடங்கியதாக வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.திலீபன் நினைவு நாளிற்குள்ளேயே போராட்டம் நடக்கலாம்.