வட மாகாண முன்னாள் முதலமைச்சரான, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவு ஒன்றை நடைமுறைப்படுத்தாது, நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, ப்ரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில், குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னர், மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு எதிரான குற்றப்பத்திரம், தமிழ் மொழியில் வாசிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த குற்றச்சாட்டுக்களில் தான் குற்றமற்றவர் என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
பின்னர், முறைப்பாட்டின் சாட்சியாளர்கள் சாட்சியங்களை வழங்கினர்.
இந்த வழக்கின் மேலதிக சாட்சிகளை இன்றைய தினம் பதிவுசெய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதேநேரம், வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான குறித்த மனுவை, மீளப் பெறவேண்டுமானால், அவர் இரண்டு நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என பா.டெனீஸ்வரன் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
தமது கட்சிக்காரரை தவறுதலாக அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியதாக சி.வி.விக்னேஸ்வரன், அவரிடம் மன்னிப்பு கோரவேண்டும் எனவும், 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி வழங்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டை விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும் நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த நிபந்தனைகளில் எதனையும் ஏற்கத் தயாரில்லை எனவும், வழக்கு விசாரணைக்கு முகங்கொடுக்க தயார் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வழக்கின் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றதுடன், மேலதிக சாட்சிய விசாரணைகளை இன்றைய தினத்திற்கு பிற்போடுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.