பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.
கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை நிறைவு செய்து, முக்கியமான வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து பிரஜைகளினதும் உரிமையாகும்.
சிறிய பாலங்கள், மரப் பாலங்கள் மற்றும் கம்பிப் பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும்.
கடந்த சில மாதங்களில் 8 ஆயிரம் கிலோமீற்றர் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதில் 400 கிலோமீற்றர் நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதான நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் இரண்டு மில்லியன் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நாட்டுவதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.