வெளிநாட்டு பணிப்பெண்ணாக மனைவி சென்ற பின்னர், 13 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம், சிராவஸ்திபுர கிராமத்தில் வசிக்கும் 39 வயதான மாற்றுத்திறனாளி சிப்பாயே கைதானார்.
2017ஆம் ஆண்டு, மனைவி வெளிநாட்டில் இருந்த போது, தனது மகளை அவர் 3 முறை வல்லுறவிற்குள்ளாக்கினார். இது தொடர்பில் மகள் அச்சமடைந்து தாயாரிற்கு தெரிவித்துள்ளார்.
எனினும், தாயார் அதை பெரிதுபடுத்தாமல் இருந்து விட்டார். பொலிசாருக்கும் அறிவிக்கவில்லை.
இந்த சம்பவத்தை சிறுமி வேறு யாருக்கும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் பாடசாலையில் நடந்த இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான பாடத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்களால் சிறுமி அச்சமடைந்துள்ளார். பாடசாலைக்கு அடிக்கடி வந்து செல்லும் சிறுவர் உரிமைகள் தொடர்பான அதிகாரி நினைவுக்கு வர, அவரிடம் சென்று தனக்கு நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தந்தை கைதாகினார். சிறுமி அநுராதபுரம் வைத்தியசாலையில் சட்டவைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அவர் அடிக்கடி துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதேவேளை, துஷ்பிரயோகத்திற்குள்ளானது தொடர்பான தகவல்களை மகள் தன்னிடம் தெரிவிக்கவில்லையென தாயார் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.



















