கொரோனாவுக்கான தடுப்பூசியை உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், பணக்கார நாடுகள் அதை வாங்குவதற்கு போட்டி போடுவதாகவும், பாதிக்கும் மேலான முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு விட்டன என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
உலகில் சுமார் மூன்று கோடிக்கும் மேலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில், பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா, இஸ்ரேல் என பல நாடுகள் இறங்கியுள்ளன.
இதில் ஒரு சில நாடுகளில் தடுப்பூசிக்கான சோதனை மனிதர்களிடம் நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது வரை எந்தவொரு தடுப்பூசியும் இன்னும் விற்பனைக்கு வரவில்லை,
இந்த நிலையில், உலக மக்கள் தொகையில் 13 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள பணக்கார நாடுகள், ஏற்கனவே முன்னணியில் உள்ள 5 தடுப்பூசிகளின் பாதிக்கும் மேலான (51 சதவீத) டோஸ்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறுகையில், தேவைப்படுகிற அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் இந்த தயாரிப்பாளர்களுக்கு இல்லை. முன்னணியில் உள்ள 5 தடுப்பூசிகளும் வெற்றி பெற்றாலும் கூட இதற்கு சாத்தியம் இல்லை.
உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கினர் அல்லது 61 சதவீதத்தினருக்கு 2022-ஆம் ஆண்டு வரை தடுப்பூசி கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கணக்கீடுகள், ஏக போகங்களையும், லாபங்களையும் பாதுகாக்கிற மருந்து நிறுவனங்களை அம்பலப்படுத்துகின்றன. இவை பணக்கார நாடுகளுக்கு சாதகமாக இருக்கும்.
அதே நேரத்தில் உலக மக்களில் பெரும்பாலோர் தடுப்பூசிக்கு தேவையானதை விட கூடுதல் காலம் காத்திருப்பார்கள் என்றும் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், லாபம் சம்பாதிப்பதற்காக தனது தடுப்பூசி டோஸ்களை பணக்கார நாடுகளுக்கு வழங்கத்தான் வாக்குறுதி அளித்துள்ளதாகவும், அதே நேரத்தில் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் மூன்றில் இரு பங்கு டோஸ்களை வளரும் நாடுகளுக்கு அளிக்க உறுதி தந்துள்ளது எனவும் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.