யானையை சஜித்திற்கு வழங்கி இணைந்து செயற்பட முன்வாருங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் சர்வதேசத்தின் மத்தியில் ஸ்ரீலங்கா வெறுப்புகளையே சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார். தொடர்ந்தம் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை கொண்டுவந்து ஒருவர் இறக்கும் வரையில் அவரே நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான ஏற்பாடுகளை கொண்டு வந்திருந்தனர். தற்போது 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாகவும் அதனையே செய்ய முயற்சிக்கின்றார்கள்.
இந்நிலையில் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்துவதற்கான உரிமையையும் நீக்குவார்களா? என்பதை கூறமுடியாது.
இந்நிலையில் தற்போது ஆளும் தரப்பினரே ஆளும் தரப்பு உறுப்பினர்களை அழிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாகவே பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவர்களே நீக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறன நிலைமையில் அரசியல் தலையீடுகள் இன்றி எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை கொள்ள முடியுமா? 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற மோசடிகளுக்கே இன்னமும் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் அவ்வாறான மோசடிகள் இடம்பெற்றால் எவ்வாறு நியாயத்தை பெற்றுக் கொள்வது.
இரட்டை குடியுரிமை உடைய ஒருவர் இந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார் என்றால். அவரால் ஏன் ஒரு குடியுரிமையை விட்டுக் கொடுக்க முடியாது.
இவ்வாறு இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவர் ஆட்சி அதிகாரங்களை பெற்றுக் கொண்டு நாட்டிலுள்ள சொத்துக்களை கொள்ளையிட்டு சென்றால் அவர் தொடர்பில் எவ்வாறு நடவடிக்கை எடுப்பது.
இதேவேளை ஜக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆளும் தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சர்வதேசத்திலிருந்து இலங்கைக்கு கிடைக்கப்பெறும் நலன்கள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியின் போது இவர்கள் விட்ட பிழையை தற்போது திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தாலும், ஆளும் தரப்பினரின் செயற்பாடுகளை பார்க்கும் போது அவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் ஜனநாயக கொள்கைகளுக்கு யாராவது பாதிப்பை ஏற்படுத்த முயற்சித்தால் அது தொடர்பில் ஏனையோர் கேள்வி எழுப்புவது வழமையே. அதற்கமைய அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்கும் நோக்கில் செயற்பட்டால் சர்வதேச நாடுகளிடமிருந்து நாட்டுக்கு ஏற்படும் எதிர்ப்புகளை தடுக்கமுடியாது.
இதேவேளை மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்றுள்ளது என்பதற்காக ஒரு குடும்பத்தின் நலனை கருத்திற் கொண்டு அரசியலமைப்பு திருத்தத்தை செய்வதற்கு முன்னர், தற்போது நாட்டு மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய வாழ்வாதார சுமையை குறைப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















