ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியின் மஹஉஸ்வெல பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிறுமியின் தாயும், தந்தையும் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தெரிய வருகையில்,
நவகத்தேகம பிரதேசத்திலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கி பயணித்த இவர்களின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த 3 வயது சிறுமி உட்பட அச்சிறுமியின் தாயும், தந்தையும் அங்கிருந்தவர்களால் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிறுமி மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கும், பெற்றோர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த தாயும், தந்தையும் புத்தளம் தள வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.