ரஷ்யாவில் விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படும் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான “ஸ்புட்னிக்-வி ‘என்ற தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த தடுப்பூசிக்கான பரிசோதனைகள் நடந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவின் அறிவிப்பை விமர்சனம் செய்தன.
இந்நிலையில் ரஷ்யாவில் விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படும் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அக்டோபர் 15-ம் தேதிக்குள் இந்த தடுப்பூசிக்கான ஒப்புதல் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான திறன் தற்போது தங்கள் நாட்டிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா காலகட்டத்தில் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்டோரின் பங்கு மிகப்பெரியது. நாட்டின் சுகாதாரமும் முன்பு இருந்ததை விட தற்போது மேலும் வளர்ந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.




















