வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலில், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, சேலம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக திருவள்ளூரில் 9 செ.மீ மழையும், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் செப்.20ம் தேதி வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















