ரஷ்யாவிலிருந்து வந்த பயணிகள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விபரங்களை கொரோனா தொடர்பான செயலணியின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிலிருந்து வந்த பயணி ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுவது வழமை. எனினும், எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த நபர் மூலம் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவு என இராணுவதளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாத்தறையிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து இன்று காலை ரஷ்யாவுக்கு செல்லவிருந்த ரஷ்யப் பிரஜைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இன்று காலை அந்த நபர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் அறிக்கை வெளிவந்த நிலையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்த ஊழியர்கள், ரஷ்யப் பிரஜை பயணித்த முச்சக்கர வண்டி சாரதிகள், அவர் நெருங்கிப் பழகிய நபர்கள் என 100 பேர்வரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















