தமிழர்கள் தனித்துவத்தினை இழக்காமல், தமிழ்த் தேசியத்தினை சிதைக்காமல், எமது உரிமையினை விட்டுக்கொடுக்காமல் நாங்கள் எங்களது அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா தினத்தில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்களை நாங்கள் சரியாக பயன்படுத்துகின்றோமா என்ற கேள்வி உள்ளது. எங்களிடம் உள்ள வளங்களை சரியானமுறையில் நாங்கள் பயன்படுத்தினோமானால் எமது பொருளாதாரம் பாரியளவில் அபிவிருத்தியடையக்கூடிய வகையில் வளங்கள் இருக்கின்றன.
எமது வளமான கடல்வளம்,வாவி,நிலவளம் ஆகியவை சரியான முறையில் வளப்படுத்தி நாங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு அவை பயன்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையின் பொருளாதார துறைக்கு பங்களிப்பு செய்யும் நான்கு துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். அதிகளவான வருமானத்தினை ஈட்டித்தரக்கூடிய இந்த துறையினை எங்களது பிரதேசத்தில் நாங்கள் அபிவிருத்திசெய்ய வேண்டும்.
எங்களது அபிவிருத்தி வளம்குன்றாமல், தமிழ்த் தேசியம் சிதைவடையாமல் இருக்கவேண்டும். எங்களது மொழி தமிழ் மொழி,வடகிழக்கு ஆட்சி மொழி தமிழ் மொழி ஆனால் இங்கு தேசிய கீதம் என்ன மொழியில் இசைக்கப்பட்டது என்பதை சிந்தித்து பாருங்கள்.
எங்களது உரிமைகளை நாங்கள் விட்டுக்கொடுக்கவேண்டுமா? இல்லாவிட்டால் இசைவாக்கம் அடைந்து பேரினவாதத்தின் வேண்டுகோளுக்கு இனங்க அவர்களுக்கு இசைவாக நடந்து எமது அபிவிருத்தியைக் கொண்டு செல்லப் போகின்றோமா? எங்களது உரிமையினை நாங்கள் கேட்டு, எங்களது உரிமையினை சரியாக பயன்படுத்தி, இருக்கின்ற உரிமைகளை நாங்கள் அனுபவித்து எங்களது வளங்களை பயன்படுத்தி நாங்கள் அபிவிருத்தி அடையப்போகின்றோமா? இதனை உங்களுக்குள் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
நாங்கள் பேரினவாதத்திற்கு இசைவாக்கம் அடைந்து எமது அபிவிருத்தியை பெறமுடியாது. எமது தனித்துவத்தினை இழக்காமல், தமிழ்த் தேசியம் சிதைவடையாமல், எமது உரிமையினை விட்டுக்கொடுக்காமல் நாங்கள் எங்களது அபிவிருத்திகளை செய்யவேண்டும்.
அதற்கான வழிவகைகள் இருக்கின்றது. எங்களது ஆட்சி மொழி தமிழ், நீதிமன்ற மொழி தமிழ் இதனை நாங்கள் எந்தவேளையிலும் விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.


















