அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் காவேரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், எந்த மொழிக்கும் கழகம் எதிரானதல்ல என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் எந்த மொழியும் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கலாச்சாரத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருக்கும் குழுவில், தமிழகத்தை சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கச்சத் தீவு மீட்கப்படவும், இலங்கை தமிழர் நலனை காக்கவும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அதிமுகவினர் அயராது பணியாற்றி மீண்டும் ஆட்சி தொடர பாடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை அழிவில் இருந்து காப்பாற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.