ஆந்திரபிரதேசத்தில் வரும் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திராவில் வரும் நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அக்டோபர் 5ம் தேதி பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக அந்த முடிவை கைவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் பள்ளி செல்லும் மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட ஸ்கூல் கிட் அக்டோபர் 5-ல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதில் மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள், ஷூக்கள், பெல்ட், ஸ்கூல் பேக் உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.
இதுமட்டுமல்லாமல் பள்ளிகளை சீரமைக்கும் பணியும் துரித வேகத்தில் நடந்து வருகிறது. இதற்காக 15,715 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் பள்ளிக்கு திரும்புவதற்குள், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.