நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை இன்று மாலையுடன் நிறைவடைவதால், இதுவரை தங்கள் பிள்ளைகளை சேர்க்காத பெற்றோர்கள், பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான ( 2020-2021 ) மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது.
1 முதல் 11-ம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெற்றாலும் 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் ஒரு வாரத்திலேயே 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வமுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்தனர்.தொடர்ந்து, மாணவர் சேர்க்கை செப்டம்பர் இறுதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 3.08 லட்சம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3.66 லட்சம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1.04 லட்சம் மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4.14 லட்சம் மாணவர்களும் நடப்பு கல்வியாண்டில் புதிதாக சேர்ந்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை நாளை மாலையுடன் நிறைவடைவதால், இதுவரை தங்கள் பிள்ளைகளை சேர்க்காதவர்கள் நாளை பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யுமாறு கல்வித்துறை தெரிவித்துள்ளது.