சிங்கள தாயொருவருக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிக்காக குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
2010ஆம் ஆண்டு நிலாவெளி கடற்கரைப் பகுதியில் உள்ள வீட்டில் நிலாவெளி இறக்கண்டியைச் சேர்ந்த சாஜகான் அல்லது பைரூஸ் என்ற எதிரியினால் 53 வயது நிரம்பிய சிங்களத் தாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
குறித்த பெண்மணி சாட்சியமளிக்கையில், குறிக்கப்பட்ட எதிரி தன்னை துஸ்பிரயோகம் புரிந்ததாக நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.
வைத்திய கலாநிதி, குறிக்கப்பட்ட பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதற்கான காயங்கள் இருப்பதாக நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.
இதேவேளை வழக்கு தொடங்கும் போது நீதிமன்றில் ஆஜராகியிருந்த எதிரி தீர்ப்பின் போது நீதிமன்றில் ஆஜராகவில்லை என்பதுடன் நீதிமன்றிலிருந்து வெளியேறிவிட்டார்.
எதிரியை குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம் எதிரிக்கு, 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை, ஐந்து இலட்சம் நட்டஈடு கட்டத்தவறும் பட்சத்தில் ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை, அத்துடன் தண்டப்பணம் 25,000 ரூபா விதித்து தீர்ப்பளித்துள்ளது.
எதிரிக்கு பகிரங்க பிடிவிராந்து பொலிஸ் மா அதிபர் ஊடாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லக்கூடாது என கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்கு பிணைகாரர்களின் பிணைமுறிப்பணம் நீதிமன்றில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன்போது நீதிமன்றில் ஆஜராகிய சிங்கள தாய் தீர்ப்பளித்ததன் பின் நீதிமன்றில் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் செலுத்தி நன்றி தெரிவித்துள்ளார். அப்பொழுது நீதிபதி அப்பெண்ணை நோக்கி குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என அறிவித்தார்.