கொழும்பு – களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் குவிந்துகிடக்கும் சடலங்கள் குறித்து பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
சுமார் 27 சடலங்கள் இவ்வாறு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரேத அறையில் இருக்கும் சமார் 36 குளிர்சாதன பெட்டிகளில் இவ்வாறு 27 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையான மரண விசாரணையின் பின் சம்பந்தப்பட்டவர்களுக்கு சடலங்களைக் கையளிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்காததினால் சடலங்கள் இவ்வாறு குவிந்திருப்பதாகவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுமார் இரண்டு ஆண்டுகள் வரையில் இவ்வாறு சடலங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட உடல்களை அடக்கம் செய்ய வசதிகள் இல்லாததால் ஊழியர்களும், பொதுமக்களும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹோமாகம பொலிஸ் பிரிவில் இருந்து 26.06.2018 அன்று கொண்டுவரப்பட்ட ஒரு உடலும், 08.08.2017 அன்று பானந்துறையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு உடலும், 05.10.2019 அன்று பிலியந்தலையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு உடலும் இதில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலடங்களை வைக்கும் 36 குளிர்சாதன பெட்டிகளில் 27 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், நான்கு குளிர்சாதன பெட்டிகள் மட்டுமே தினசரி சேவைக்கு பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு குளிர்சாதன பெட்டியில் இரண்டு உடல்களை வைக்க முடியாது என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், குறித்த விடயத்தில் உரிய தரப்பினர்கள் கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியசாலை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



















