பிள்ளைகள் சுதந்திரமாக மன மகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்த்திருத்தமொன்று இந்த நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘அபே கம’ வளாகத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின தேசிய நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தைவிட கல்வி சீர்த்திருத்தம் இந்நாட்டின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்துகிறது. நாம் கல்விக்கு தேசிய வருவாயிலிருந்து எவ்வளவு தொகையை ஒதுக்கினாலும் பிள்ளைகளுக்கு கல்வி சுதந்திரம் இன்றேல் அதனால் பயனற்று போகும்.
அனைத்து விடயங்களையும் மீண்டும் கட்டியெழுப்பும் யுகமொன்று மீண்டும் உருவாகியுள்ளது. வீட்டின் பின்புறத்தில் விளையும் மஞ்சள் செடி முதல், நீங்கள் பாடசாலைக்கு அணியும் சீருடை வரை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் யுகமொன்று தோற்றம் பெற்றுள்ளது.
அன்பார்ந்த குழந்தை செல்வங்களே, 2005ஆம் ஆண்டு இத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலப்பகுதியில் நாம் முகங்கொடுத்து வந்த பிரச்சினைகளை எதிர்கால தலைமுறையினர் அனுபவிக்க இடமளிக்க மாட்டோம் என அப்போது நான் மக்கள் சந்திப்பொன்றின் போது குறிப்பிட்டிருந்தேன்.
2005ஆம் ஆண்டில் பிறந்திருக்காத பிள்ளைகள் கூட இந்த சந்தர்ப்பத்தில் இங்கு இருக்கக்கூடும். அப்பிள்ளைகளுக்கு அன்று காணப்பட்ட வரலாறு குறித்து இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்ட வேண்டும்.
அந்த காலப்பகுதியில் இந்நாட்டில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இன்று போல சுதந்திரமாக பயணிக்க முடியாத சூழலே காணப்பட்டது. எந்த சந்தர்ப்பத்திலும் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்து விடலாம் என்ற அச்சம் காணப்பட்டது.
நான்கு, ஐந்து கிலோமீற்றருக்கு ஒரு சோதனை சாவடி காணப்பட்டது. பல்வேறு இடங்களில் பேருந்துகளிலிருந்து இறங்கி சோதனைக்கு உட்படுத்தப்பட்டே பயணிக்க வேண்டியிருந்தது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. இதனால் அக்காலப்பகுதியில் பலரும் கால்களை இழக்கும் நிலை ஏற்பட்டது.
காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் அம்பியுலன்ஸ் வண்டிகள் காலி வீதியில் அங்கும் இங்கும் பயணிப்பதையே அதிகளவில் காண கிடைத்தது. அதுமாத்திரமன்றி அன்று ஆயிரக்கணக்கான பிள்ளைகள் அநாதை இல்லங்களிலேயே பிறந்தனர்.
போரினால் அனாதரவானர்கள் வசிக்கும் குடிசைகளிலிருந்தே பாடசாலைகளுக்கு சென்றனர். அவ்வாறானதொரு நாட்டில் 2005ஆம் ஆண்டு மக்களை சந்தித்த போது, நாம் தற்போது எதிர்நோக்கும் இவ்வாறான இன்னல்களை எதிர்கால தலைமுறையினர் அனுபவிக்க இடமளிக்க மாட்டோம் என குறிப்பிட்டேன்.
இன்று அந்த எதிர்காலம் உதயமாகியுள்ளது. அன்றைய தலைமுறையினர் முகங்கொடுத்த பிரச்சினைகள் இன்று என் முன்னிலையிலுள்ள பிள்ளைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை இல்லை.
அன்று நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே மின்சாரம் காணப்பட்டது. காபட் செய்யப்பட்ட வீதிகள் இந்நாட்டில் மிக சொற்பமே காணப்பட்டன. மக்கள் தொகையில் 5 வீதத்திற்கு மாத்திரமே கணினி கல்வி காணப்பட்டது.
அவற்றினால் ஏற்பட்ட பிரச்சினைகளை இன்றைய தலைமுறையினர் முகங்கொடுக்காத நாட்டை நாம் உருவாக்கியுள்ளோம். நாம் அன்று நாட்டில் நவீன தொழிநுட்பத்தை மேம்படுத்தியமையால் கொவிட் – 19 தொற்று ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்நாட்டில் இலட்சக்கணக்கான பிள்ளைகளுக்கு கணினி பயன்பாட்டின் மூலம் பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடியதாயிற்று.
தொலைதூர பிள்ளைகள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதும் இந்த தொழிநுட்பம் மூலமேயாகும். அதனால் இன்று நாம் ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்போமாயின், எதிர்காலத்தில் அவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காத நாடொன்றை நாம் உருவாக்குவோம்.
நாம் சிறு பராயத்திலேயே பிள்ளைகளை பிரித்து விடுகின்றோம். சிங்கள பிள்ளைகளை சிங்கள பாடசாலைகளுக்கும், முஸ்லிம் பிள்ளைகளை முஸ்லிம் பாடசாலைகளுக்கும், இந்து பிள்ளைகளை இந்து பாடசாலைகளுக்கும் என சிறு வயதிலேயே பிரித்துவிடுகிறோம்.
சிறு பராயம் முதல் இவ்வாறு பிரித்து வைத்துவிட்டு, பெரியவர்களானவுடன் அனைவரையும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கூறுகின்றோம்.
இப்பிள்ளைகள் இன, மத அடிப்படையில் மாத்திரமன்றி தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை, சர்வதேச பாடசாலை என பாடசாலைகளினாலும் பிரித்தாளப்படுகின்றனர்.
ஒரே நீதி ஒரே நாடு அவசியமாயின் சிறு பராயம் முதல் இந்த பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். இப்பிள்ளைகளிடம் அவர்களுக்கு உள்ள பாரிய பிரச்சினை யாது என்று கேட்டால் கல்வி கற்பது என்று கூறுவர்.
அவர்களுக்கு உள்ள கடினமான விடயம் என்னவென்று கேட்டால் பரீட்சை எழுதுவது என்று கூறுவர். நாம் கல்வியை மேம்படுத்துவதற்கு ஆயிரக்கணக்கான கட்டிடங்களை நிறுவினாலும், புத்தகங்கள், சீருடைகள், டெப் என்பவற்றை கொடுத்தாலும், பிள்ளைகள் மனமகிழ்வுடன் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்காவிடின் அவை எவற்றினாலும் பயனில்லாது போய்விடும்.
நாம் தேசிய வருவாயிலிருந்து கல்விக்கு எவ்வளவு தொகை ஒதுக்கினாலும், பிள்ளைகளுக்கு கல்வி சுதந்திரம் இன்றேல் அதனால் எப்பயனும் இராது. அதனால் கல்விக்கு நிதி ஒதுக்குவதற்கு மாறாக பிள்ளைகளுக்கு சுதந்திரமாக, மனமகிழ்வுடன், எவ்வித சுமையுமின்றி கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்த்திருத்தமொன்று இந்நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுகிறது.
அது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தைவிட இந்நாட்டின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்துமொன்றாகும். இந்நாட்டை பாதுகாப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, கோடி கணக்கிலான மக்கள் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர் என்பதை இப்பிள்ளைகள் நினைவில் கொள்ள வேண்டும்.
எதிர்கால தலைமுறையினர் வரலாற்றை திரும்பி பார்க்கும் போது இக்காலத்தில் வாழ்ந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றும் வகையிலான ஒரு நாட்டை நிர்மாணிப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தனது திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை 2020 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இதன்போது நினைவு முத்திரையொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.