கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை இரவு வோல்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேரிலாண்டின் பெதஸ்தாவில் உள்ள மருத்துவமனை அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ மருத்துவ மையமாகும்.
இந்த மருத்துவ மையத்தில் ஏறக்குறைய 7,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். 74 வயதான ட்ரம்ப் அந்த மையத்தில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த மருத்துவ மையத்தில் அமெரிக்க ஜனாதிபதிகளிற்கென தனியான ஒரு தொகுதி (presidential suite) உள்ளது. ட்ரம்ப் அங்கு சில நாட்கள் செலவிடுவார் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
வார்ட் 71 என அழைக்கப்படும் இந்த தொகுதி, ஜனாதிபதிகள் தங்கள் உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொண்டபடி சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ மையத்தில் உயர் பதவியில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் வெள்ளை மாளிகை அமைச்சரவை உறுப்பினர்களுக்காக ஆறு சிறப்பு நோயாளிகள் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றே ஜனாதிபதி தொகுதி.
படுக்கையறை, படுக்கைகள் கொண்ட ஹோல், மருத்துவரின் அலுவலகம், மாநாட்டு அறை, அலுவலக இடம் மற்றும் ஒரு சாப்பாட்டு அறை ஆகியவை ஜனாதிபதி தொகுதியில் உள்ளன.
மருத்துவ மையத்தில் ஜனாதிபதி தொகுதி அமைந்திருந்தாலும் அதனை வெள்ளை மாளிகையே கட்டுப்படுத்துகிறது. வோல்டர் ரீட் நிர்வாகிகள் கட்டுப்பாடற்ற விதமாக அங்கு நுழைய முடியாது.
வெள்ளை மாளிகையின் மருத்துவர்களால் சிகிச்சையளிக்க முடியாவிட்டால், இந்த மருத்துவ மையத்தில் ஜனாதிபதிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ட்ரம்பின் தலைமைத் தளபதியின் அலுவலகமும், ஜனாதிபதி தொகுதிக்கு அண்மையில் இயங்கும். அத்துடன், தகவல் தொடர்பு பிரிவு, பாதுகாப்பு சாதனங்களும் அங்கு இயங்க ஆரம்பிக்கும்.
முன்னாள் ஜனாதிபதிகள் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோருக்கு சிகிச்சையளிப்பதில் பணியாற்றிய ரியர் அட்மிரல் கோனி மரியானோ, இது குறித்து தனது அனுபவங்களை 2010 ஆம் ஆண்டு தி வைட் ஹவுஸ் டாக்டர் என்ற நூலில் எழுதியுள்ளார்.
ஜனாதிபதிகள் மற்றும் துணை ஜனாதிபதிகள் வோல்டர் ரீடில் உள்ள மருத்துவ மதிப்பீட்டு மற்றும் சிகிச்சை பிரிவில் (METU) சிகிச்சையளிக்கப்படுகிறார்கள். அவர்களின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக பொருத்தப்பட்ட ஒரு தனி தொகுதி உள்ளது என மரியானோ விளக்கினார்.
டிரம்ப் மருத்துவ மையத்தில் தங்கும் ஜனாதிபதி தொகுதி, 2011 இல் தேசிய கடற்படை மருத்துவ மையம் மற்றும் வோல்டர் ரீட் இராணுவ மருத்துவ மையம் இணைந்தபோது அமைக்கப்பட்டது.
ஜனாதிபதி தொகுதி சுமார் 3,000 சதுர அடி பரப்பில்- அமெரிக்க ஜனாதிபதிகள் வழக்கம் போல் வேலை செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது என்றார்.
இந்த மருத்துவமனை வோஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து ஒன்பது மைல் தொலைவில் அமைந்துள்ளது.
மொத்தத்தில், இந்த மையத்தில் 244 படுக்கைகள் மற்றும் 50 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உள்ளன.
வோல்டர் ரீடிற்குள் 165 “ஸ்மார்ட் சூட்டுகள்” உள்ளன. அவை இருவழி தொடர்பு சாதனங்களுடன் கட்டப்பட்டுள்ளன. ஆடியோ விஷுவல் மற்றும் வயர்லெஸ் திறன்கள் மற்றும் படுக்கை பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.
டிரம்ப் இன்னும் ஜனாதிபதி பொறுப்பில் இருக்கிறார். எந்தவொரு அதிகாரத்தையும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸுக்கு மாற்றவில்லை என்றும் வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை கூறியது.
ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்துவிட்டால், டிரம்ப் 25 வது திருத்தத்தின் கீழ் பென்ஸுக்கு அதிகாரத்தை மாற்ற முடியும்.
இந்த திருத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1967 முதல் ஜனாதிபதிகள் இதை மூன்று முறை மட்டுமே செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் 1985ஆம் ஆண்டில் கொலோனோஸ்கோபிக்கு உட்படுத்தப்பட்டபோது, துணை ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷுக்கு வழங்கினார்.
ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 2002 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் கொலோனோஸ்கோபிகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் துணை ஜனாதிபதி டிக் செனிக்கு அதிகாரத்தை வழங்கினார்.
டிரம்ப்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில், டிரம்பிற்கு ரெம்டெசிவிர் ஒரு டோஸ் வழங்கப்பட்டதாக வெள்ளை மாளிகையின் மருத்துவர் சீன் பி கான்லி கூறினார்.
ட்ரம்ப் “மிகச் சிறப்பாக செயல்படுகிறார்” என்றும் “கூடுதல் ஒக்ஸிஜன் தேவையில்லை” என்றும் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதுப்பிப்பில் கான்லி கூறினார்.
ட்ரம்பிற்கு எம்போலா, எஸ்ஏஆர்எஸ் மற்றும் ஹெபடைடிஸ் சி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஒரு டோஸ் வழங்கப்பட்டதாகவும் மருத்துவர் கூறினார்.