தமிழகத்தில் கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டு மனைவி நாடகமாடிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் கணேஷ் (39). இவர் வீடியோகிராபராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (31). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கணவனும் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி கூறினார்.
இதை தொடர்ந்து உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு நினைவு திரும்பாமல் இருந்ததால் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.
இதை தொடர்ந்து கணேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார். பின்னர் நினைவு திரும்பியதும், வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த தன்னை இருளில் யாரோ தாக்கியதாக அவர் பொலிசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து கணேஷ் மனைவி காயத்ரியிடம் பொலிசார் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தார். மேலும், கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது
காயத்ரிக்கும் மதுரையை சேர்ந்த யாசின் என்பவருக்கும் தொடர்பு இருந்ததும், யாசினுக்கு தனது கணவரின் பெயரில் உள்ள வீட்டுப் பத்திரத்தை வங்கியில் வைத்து காயத்ரி பத்து லட்ச ரூபாய் கடன் பெற்றுக் கொடுத்ததும் தெரியவந்தது.
அதாவது தனது சகோதரரின் பணத்தேவைக்காக பணத்தை கொடுத்ததாக கணவரிடம் காயத்ரி கூறினார்.
ஆனால் சகோதரனுக்கு கொடுக்காமல் யாசினுக்கு கொடுத்து அந்த பணத்தில் யாசின் ப்ளே ஸ்கூல் ஆரம்பித்துள்ளார்.அதில் ஆசிரியையாக காயத்திரியும் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில்தான் காயத்ரி தனது சகோதரனுக்கு பணம் கொடுக்கவில்லை என்பது கணவர் கணேஷுக்கு தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து கணவன் மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து யாசினுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி சம்பவத்தன்று காயத்ரி வீட்டின் கதவுகளை தாளிடாமல் திறந்து வைத்துள்ளார்.
வீட்டினுள்ளே வந்த கூலிப்படையினர் கணேசனை சுத்தியால் தலையில் அடித்துள்ளதாக தெரிகிறது. இதில் மண்டை ஓடு உடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு இருக்கிறது. இதில் காயமடைந்த கணேஷ் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதனை தொடர்ந்து அவரது மனைவி காயத்ரி மற்றும் கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார், கருணாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர், இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி யாசின் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.