நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமகா நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதுடன் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மக்களின் பொருளாதார பிரச்சனை கருத்தில் கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளில் திரையரங்குகளை திறக்கவும் மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வெளியிட்டார்.
அதன்படி, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும்.
திரையரங்குகளுக்கு வரும் அனைவரும் முககவசம் அணிவது, உடல் வெட்ப பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம்!
அனைத்து தியேட்டர்கள்/ சினிமா ஹால்கள்/ மல்டிபிளக்ஸ்களிலும் மத்திய அரசு வெளியிட்டுள்ள கோவிட்-19 வழிகாட்டுதல்களை மற்றும் நிலையான செயல்பாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
திரைப்படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவெளி முடிந்த பிறகும் கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும்.
திரையரங்குகளுக்கு உள்ளே 24 – 30 டிகிரி வெப்பநிலை நிலவுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
டிக்கெட் முன்பதிவு செய்வோரின் விவரங்களை கட்டாயம் சேகரிக்க வேண்டும். இது தொற்று ஏற்பட்டால் அதன் பின்னணி மற்றும் தொடர்ச்சியை கண்டறிய உதவிகரமாக இருக்கும்.
திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் அரோக்ய சேது செயலியை பதிவிரக்கம் செய்திருக்க வேண்டும்.
தியேட்டர்களில் டிக்கெட் கவுன்ட்டர்கள் நாள் முழுவதும் திறந்திருக்க வேண்டும். இது கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், முன்பதிவு செய்வதற்கும் உதவியாக இருக்கும்.
திரையரங்கு உள்ளே உணவு பண்டங்களை வழங்க தடை விதிக்கப்படுகிறது.