அமேசான் நிறுவனத்தின் 20,000 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றால் உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நேரில் சென்று பொருட்களை வாங்குவதற்கு மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருட்களை வாங்குவதற்கு இ-காமர்ஸ் நிறுவனங்களையே மக்கள் பெரிதும் சார்ந்திருக்கின்றனர். இதன் காரணமாக திடீரென தேவை அதிகரித்ததால் ஒரு லட்சத்திற்கும் மேலான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை அமேசான் நிறுவனம் பணியமர்த்தியும், அவர்களுக்கு ஊதிய பலன்களை அளித்தும் அந்நிறுவனம் ஊக்கமளித்து வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் 19ம் தேதி வரை அமேசான் முன்களப் பணியாளர்கள், உணவு சந்தை பணியாளர்கள் என 19,816 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் அடிப்படையில், நிறுவன ஊழியர்களுடன், பொதுமக்களை ஒப்பிட்டால் 33,952 பேர் பாதிப்புக்குள்ளாகியிருக்க வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்களுடன் ஒப்பிடுகையில் இது 42% குறைவான பாதிப்பு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.