இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜெயக்குமார் மீது, கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஒருவர், கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி பொதுச்சந்தையில் தந்து மரக்கறி வாணிபத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜெயக்குமார் மீது சிவில் உடையில் இருந்த கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி, இழுத்து விழுத்தி தாக்குதல் மேற்கொண்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், சந்தை வர்த்தகர்களிடம் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்திச் சென்றிருந்தனர். மீண்டும் 5 நிமிடத்தில் வந்த அவர்கள்
ஜெயக்குமாரிடம் ஏன் முகக்கவசம் அணியவில்லை என கேட்டதாக கூறப்படுகின்றது.
இதன்போது, நண்பகல் என்பதால் நுகர்வோர் அதிகமாக இருக்கிறார்கள். கடையை இப்படியே விட்டு செல்ல முடியாது. அதனை விட ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளியான தான், எனது உதவியாளர் வருகைக்காக காத்திறுக்கின்றேன் என அவர் பதிலளித்ததாக கூறப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, உனக்கு கடைக்கு போய் வாங்குவதற்கு என்ன என்று கேட்டவாறு, சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாற்றுத்திறனாளியான ஜெயக்குமாரை இழுத்து வீழ்த்தி தாக்கியதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் சந்தை வர்த்தகருமான ஜெயக்குமார் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திலும் மனித உரிமை ஆணைக் குழுவிலும் தனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.