மொனராகலை – புத்தல பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு அதிகாரிகள், நீர்கொழும்பு மருத்துவமனையின் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய, மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் சேவையாற்றிய நிலையில் தலைமறைவாக இருந்த 26 வயதான இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட நபர் புத்தல, கங்க வீதி, கட்டுகஹல்லகே பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவர் புத்தல – கட்டுகஹல்லகே பிரதேசத்தில் வசித்து வருவதாக, கிடைத்த தகவலுக்கு அமைய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், புத்தல பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அந்த நபரின் வீட்டுக்கு பொலிஸார் சென்றுள்ளனர். தனது மகன் கடந்த மூன்று மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை என வீட்டில் இருந்த இளைஞனின் தாய், பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள், இளைஞனின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை தாயிடம் பெற்றுக் கொண்டு, உரையாடி எங்கு இருக்கின்றீர்கள் எனக் கேட்டுள்ளனர்.
தான் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு எதிரில் இருப்பதாக இளைஞன் கூறியுள்ளார். புத்தல பொலிஸார், இதனை நீர்கொழும்பு மருத்துவமனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.