பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் சுமார் 2 மில்லியன் டொலர் பணத்துடன் யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 சூட்கேஸ்களில் பணத்தை மறைத்து, டுபாய்க்கு எடுத்து சென்றபோது, அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
லீட்ஸைச் சேர்ந்த தாரா ஹன்லோன் (30) என்ற யுவதியே கைதானார். ஒக்டோபர் 3 ஆம் திகதி ஹீத்ரோ விமான நிலையத்தின், இரண்டாவது முனையத்தில் எல்லைப் பாதுகாப்பு படையினரால் சோதனையிடப்பட்டார்.
எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் இந்த ஆண்டு கண்டுபிடித்த, பெரிய பணக்கடத்தல் விவகாரம் இதுவாகும்.
அவரது சூட்கேஸ்களிற்குள் 1.9 மில்லியன் டொலர் பணம் மீட்கப்பட்டது. அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஒக்டோபர் 5 ஆம் திகதி ஒக்ஸ்பிரிட்ஜ் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
அவருடன் கைதான, மற்ற பெண் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹன்லோன், நவம்பர் 5 ஆம் திகதி ஐஸ்லெவொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார். அதுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



















