கிழக்கு ஐரோப்பிய நாடுகளான அஜர்பைஜான், ஆர்மீனியா ஆகிய நாடுகளிடையே மீண்டும் போர் பதற்றம் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை அஜர்பைஜான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கஞ்சா மீது ஆர்மீனியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும் 34 பேர் காயமடைந்ததாகவும் அஜெரி வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று காலை கஞ்சாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தாக்குதலில் மேற்குறிப்பிட்டுள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் கஞ்சா மீதான தாக்குதல் குறித்த அஸெரி குற்றச்சாட்டுகளை “ஒரு முழுமையான பொய்” என்று மறுத்துள்ளதுடன், அஜர்பைஜான் நாடுதான் கராபாக்கிற்குள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.
ஆர்மீனியாவின் இந்த குற்றச்சாட்டினை மறுத்த அஜர்பைஜான், மிங்கசேவீரில் உள்ள அஜெரி நீர் மின் நிலையம் மீது ஆர்மீனியாதான் வான் வழி தாக்குதலை நடத்தியது என குற்றம் சாட்டியுள்ளது. வழக்கம் போல கராபக்கில் உள்ள இன ஆர்மீனிய படைகள் இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளன.
நாகோர்னோ-கராபாக்கில் உள்ள ஆர்மீனியப் படைகளின் தலைவரான அராயிக் ஹராட்யூன்யன், ஞாயிற்றுக்கிழமை காலை நிலைமை ஒப்பீட்டளவில் அமைதியானது என்று விவரித்தார், ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தனக்குத் தெரியாது என்றும், முன்னணி நிலைப்பாடு பதட்டமாகவே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
1991-94 போருக்குப் பின்னர் இந்த சண்டை மிக மோசமானது என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



















