தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அண்ணனை உயிருடன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாகும்வரை விடிய விடிய காத்திருந்த தம்பியின் செயலால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், தமது அண்ணன் இறந்துவிட்டதாக கூறி குளிர்சாதனப்பெட்டிக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து தொடர்புடைய நபர்கள் குளிர்சாதனப்பெட்டியுடன் சரவணன் வீட்டுக்கு சென்று ஒப்படைத்துவிட்டு, பகலில் வருவதாக கூறிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் குளிர்சாதனப் பெட்டியை திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள்,
குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவர் உயிரோடு துடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,
சரவணனின் அண்ணன், குளிர்சாதனப் பெட்டிக்குள் இரவு முழுவதும் உயிரோடு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, காவல்துறையினர் குளிர்சாதன பெட்டிக்குள் துடித்துக் கொண்டிருந்த முதியவர் பாலசுப்பரமணிய குமாரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடல் நலம் பாதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து அடைத்து, இறந்துவிட்டதாக அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் கூறிய சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.