கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதியது. அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணித்தலைவர் மோர்கன் முதலில் துடுப்பாட்டம் தெரிவு செய்தார்.
இதனையடுத்து தொடக்க வீரர்களாக திரிபதி, கில் களமிறங்கினர். ஆனால் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத கொல்கத்தா அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
திரிபதி (7), ராணா (5), கில் (21), தினேஷ் கார்த்திக் (4), ரசல் (11) என அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதையடுத்து அணித்தலைவர் மோர்கன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி இறுதி கட்டத்தில் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்கள் எடுத்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் கம்மின்ஸ் 36 பந்துகளில் 53 ஓட்டங்களும், மோர்கன் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.
நிதானமாக ஆடிய ரோஹித் 36 பந்தில் 35 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின் இறங்கிய சூர்யா குமார் யாதவ் 10 ரன்களில் அவுட் ஆனார்.
ஆனால் டி காக் 44 பந்துகளில் 78 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார். துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா அணியை எளிதில் வீழ்த்தியது.
16.5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை ருசித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டி காக் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்கள் குவித்தார்.