உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னரும் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாக்குகளின் மூலம் நியமிக்கப்பட்ட அரச தலைவருக்கு பொலிஸ்மா அதிபரை நீக்க முடியாது போனது. பாராளுமன்றத்திற்கும் அவரை நீக்க முடியாது. இவ்வாறானதொரு அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கும்போது பொலிஸ்மா அதிபருக்கு விலகுமாறு ஜனாதிபதி கூறும்போதும் அவர் விலகாதுள்ளார். ஜனாதிபதிக்கும் இதுவரை பொலிஸ்மா அதிபரை விலக்க முடியவில்லை. 69 இலட்சம் பேர் வாக்களித்தது பொலிஸ்மா அதிபரொருவரை நீக்கிக் கொள்ள முடியாத ஜனாதிபதி பதவிக்கா? என கேள்வியெழுப்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
நாடாளுமன்றத்தில் இன்று (21) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் எமக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான நாளாகும். அரசியலமைப்பு திருத்தங்கள் மூன்றின் கீழ் இந்த கௌரவ சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னொரு இருப்பாராயின் அது கௌரவ உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஆவார்.
நான் இந்த பாராளுமன்றத்தில் 1970ஆம் ஆண்டு பதவியேற்றது சோல்பரி அரசியலமைப்பு திருத்தத்தின் கீழாகும். அது மகாராணிக்கும் பிரித்தானிய மகுடத்திற்கும் ஆதரவாக.
அதன் பின்னர் பிரித்தானியாவிலிருந்து விலகி முழுமையான குடியரசாக மாறிய குடியரசு அரசியலமைப்பு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கீழ் அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது எனக்கு நினைவிருக்கிறது.
அன்று 1972 குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றி பாராளுமன்ற கட்டிடத்தில் கூடவில்லை. அன்று கொழும்பு றோயல் கல்லூரியின் அரங்கில் ஒன்றுகூடியே புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டது. அங்கு ஒன்றுகூடியே நாம் குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றினோம். பேரரசிடமிருந்து முழுமையான சுதந்திரம் கிடைத்த அரசியலமைப்பிற்கு நாம் மிகுந்த கௌரவத்துடன் கைகளை உயர்த்தினோம். நாட்டிற்கு முழுமையான சுதந்திரத்தை பெற்றுத்தரும் அவ்வாறான அரசியலமைப்பிற்காக கை உயர்த்தியர் என்பதை நான் மிகுந்த பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
அடுத்ததாக 1977 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர்.ஜயவர்தனவினால் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டது. அன்று இருந்த குடியரசு அரசியலமைப்பை நீக்கி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் 1978ஆம் ஆண்டு இன்று நாம் ஆளப்படுகின்ற புதிய அரசியலமைப்பை கொண்டுவந்தார்.
இந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து எமக்கு பாராளுமன்றத்தில் இருக்க இடமளிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் இந்த அரசியலமைப்பிற்கு எதிராக முதலாவதாக எனது கையும் உயர்ந்திருக்கக்கூடும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு காரணம் இந்த அரசியலமைப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அன்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்த அரசியலமைப்பு போன்று விமர்சனங்களுக்கு உள்ளான அரசியலமைப்பொன்று இல்லை.
இந்த அரசியலமைப்பிற்கு முதலாவதாக எதிர்ப்பை வெளியிட்ட கலாநிதி என்.எம், கொல்வின், சரத் முத்தெடுவேகம போன்றோர் இன்று உயிருடன் இல்லை. எனினும் இன்னும் இந்த அரசியலமைப்பை கொண்டு செல்ல வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த அரசியலமைப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்ப்பு தெரிவித்தாலும், இதன் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு ஜனாதிபதிகள் தோற்றம் பெற்றுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ஜே.ஆர்.ஜயவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிகாரத்திற்கு வருவதற்கு முடியாத வகையில் இந்த அரசியலமைப்பை உருவாக்கினாலும் அதன் கீழ் அதிக ஜனாதிபதிகளை தோற்றுவித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே அதிகளவான காலம் நாட்டை ஆட்சி செய்துள்ளது என நான் எண்ணுகின்றேன்.
அதனால் நாம் இந்த அரசியலமைப்பின் கீழ் அரசியல் ஏளனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளோம். ஆனால் எமக்கு இந்த அரசியலமைப்பை மாற்றுவதற்கு முடியாது போயுள்ளது. அவ்வாறு அரசியலமைப்பை மாற்றுவதற்கு முடியாது போனமைக்கு காரணம் ஒரு கட்சிக்கு இந்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாமல் போனமையே ஆகும்.
எனினும், ஒருபோதும் இந்த தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற விடயத்தை வரலாற்றில் முதன் முறையாக நாம் பொய்யாக்கிக் காட்டியுள்ளோம்.
இநாட்டின் மக்களுக்கு தேவையாகவிருந்தது நிலையான பல்வேறு கும்பல்களுக்கும், சர்வதேச சக்திகளுக்கு அடிபணியாது மக்கள் இறையாண்மையை காக்கும் அரசாங்கமொன்றை உருவாக்குவதே ஆகும். அதற்காகவே இந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் எமக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். நாம் இந்த 20ஆவது திருத்தத்தை கொண்டுவந்து தயாராவது, இந்த அரசியலமைப்பை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு அல்ல. இந்நாட்டு மக்கள் எதிர்பார்த்த தேசத்தை கட்டியெழுப்பும் புதிய அரசியலமைப்பை விரைந்து கொண்டுவரும் வரை இந்நாட்டின் பணிகளுக்கு ஏற்ப முன் கொண்டு செல்வதே ஆகும்.
அரசியலமைப்பு போன்றே அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வரும்;போதும் பாராளுமன்றத்தில் பல்வேறு விவாதங்கள் ஏற்படுகின்றன. எனினும், வரலாற்றில் சில அரசியலமைப்புகள் உறுப்பினர்களுக்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தியே கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த 20ஆவது திருத்தத்தை நாம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவது அவ்வாறான அழுத்தங்களை மேற்கொண்டோ, டீல்களுக்கு மத்தியிலோ அல்லது வாக்குகளை பறித்துக் கொண்டோ அல்ல. அதனாலேயே 20 ஆவது திருத்தத்தை கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்தில் எமது தரப்பில் பாரிய விவாதங்கள் ஏற்பட்டது. 19ஆவது திருத்தத்தின் போது அவ்வாறு இடம்பெற்றதா என்பதை நான் கேட்க விரும்புகிறேன். 19 கொண்டுவரும்போது மஹாசங்கத்தினருக்கும் எவருக்கும் எதிர்ப்பை தெரிவிக்க இடமளிக்கவில்லை. அது அவ்வாறு இடம்பெற்றது 19ஆவது திருத்தம் உறுப்பினர்களின் மனசாட்சிக்கு ஏற்றுக் கொண்டதாலா? இல்லை. எதிர்ப்பு குறித்து விவாதிக்க இடமிருக்கவில்லை. அதனால் விவாதங்களுக்கு மத்தியில் டீல் இன்றி மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து கொண்டுவரப்படும் இந்த 20ஆவது திருத்தம் குறித்து நாம் மகிழ்வடைகிறோம்.
நாம் 20ஆவது திருத்தத்தின் மூலம் விடேசமாக எதையும் உருவாக்கவில்லை. நாம் 20ஆவது திருத்தத்தை கொண்டுவருவது மக்கள் வெறுக்கும் நாட்டை அராஜாக பாதைக்கு கொண்டுசெல்லும் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கே ஆகும். 100 நாட்களுக்குள் கொண்டுவரப்பட்ட இந்த 19ஆவது திருத்தம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடமிருந்தும் வரவேற்பில்லை. அதை உருவாக்கியவர்களும் அது ஒரு தவறு என கூறுகின்றனர். தற்போது இடம்பெறும் உயிர்த்த ஞாயிறு தின விசாரணைகளின் மூலம் 19இன் கீழ் நாடு எவ்வளது அராஜக நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளது என்பது தெரிகிறது. தேசிய பாதுகாப்பு எந்தளவிற்கு பலவீனமடைந்துள்ளது என்பது புலப்பட்டுள்ளது. 19 இந்நாட்டு மக்களின் இறையாண்மைக்கு ஏற்படுத்திய பாதிப்புகளை நீங்கள் அறிவீர்கள்.
அதுமாத்திரமன்றி இந்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வரப்பட்டது ஒரு குடும்பத்திடம் பழிவாங்கும் நோக்கிலாகும். ராஜபக்ஷர்களின் பிரஜாவுரிமையை நீக்காது, நீக்குவதற்கு. எனினும், அதன் மூலம் நாட்டின் ஒற்றுமை, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டமையே இடம்பெற்றது.
13ஆவது திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எனக்கு நினைவிருக்கின்றது. 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்வதன் மூலம் எமது நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி காணப்படுவதனாலேயே என உச்சநீதிமன்றம் அன்று அறிவித்தது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதனாலேயே நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுகின்றது.
நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கவிருந்த ஜனாதிபதியின் அதிகாரத்தை வரையறுக்கும் செயற்பாடே 19இன் மூலம் முன்னெடுக்கப்பட்டது. அந்த வரையறைகள் மேற்கொள்ளப்பட்டு மூன்று ஆண்டுகளில் அதற்கான பிரதிபலன்களை நாம் கண்டோம். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் சுமார் பத்தாயிரம் பேர் அறிந்திருந்ததாக புலனாய்வுத்துறை பிரதானி தெரிவித்திருக்கிறார். பத்தாயிரம் பேர் அறிந்திருந்தும் தாக்குதலை தடுக்க முடியாது போயிற்று.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் தெரிவிக்கும் விடயங்களை கேட்டும்போது மதிப்பிற்குரிய சபையில் பொறுப்பு கூற வேண்டிய எம் அனைவருக்கும் அவமானமாகவுள்ளது. ஜனாதிபதிக்கு நாட்டை பாதுகாப்பதற்கு எதுவுமில்லை. பிரதமருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் ஒன்றும் செய்வதற்கில்லை. பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் அறிந்த எவரும் இல்லை. இதனால் ஒன்றும் அறியாத பல குழந்தைகள் உயிரிழக்க நேரிட்டது.
ஏன் இவ்வாறு இடம்பெற்றது?
நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாக்குகளின் மூலம் நியமிக்கப்பட்ட அரச தலைவருக்கு இவ்வாறானதொரு அசம்பாவிதம் இடம்பெற்றதன் பின்னராவது பொலிஸ்மா அதிபரை நீக்க முடியாது போனது. பாராளுமன்றத்திற்கும் அவரை நீக்க முடியாது. இவ்வாறானதொரு அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கும்போது பொலிஸ்மா அதிபருக்கு விலகுமாறு ஜனாதிபதி கூறும்போதும் அவர் விலகாதுள்ளார்.
ஜனாதிபதிக்கும் இதுவரை பொலிஸ்மா அதிபரை விலக்க முடியவில்லை. 69 இலட்சம் பேர் வாக்களித்தது பொலிஸ்மா அதிபரொருவரை நீக்கிக் கொள்ள முடியாத ஜனாதிபதி பதவிக்கா?
அதுமாத்திரமன்றி 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட பொலிஸ் ஆணைக்குழு பொறுப்பு கூற வேண்டியது யாருக்கு என்ற பிரச்சினையும் தற்போது எழுந்துள்ளது.
இந்த அரசியலமைப்பின் கீழ் இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை வகித்தவர் நான். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி இருந்திருக்காவிடின் 2006ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கட்சி மாறியவர்களால் யுத்தம் நடத்துவதை நிறுத்தியிருக்க வேண்டியிருந்திருக்கும். அன்று கொழும்பில் ஆயிரக்கணக்கான தற்கொலை குண்டுதாரிகள் தங்களது இலக்கை நோக்கி செல்வதற்கு முன்னர் தடுத்து நிறுத்தினோம். லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் கொலை செய்யப்பட்டது எனது காலப்பகுதியில் அல்ல. எனினும், அந்த கொலையாளிகள் அனைவரையும் எனது ஆட்சிக் காலத்தில் பிடிக்க முடிந்தது.
19ஆவது திருத்தத்தின் பின்னர் எதிரான கட்சிகளின் அரசியல்வாதிகளின் பின்னர் துரத்திச் செல்வதற்கே குற்றப்புலனாய்வு பிரிவினர் பயன்படுத்தப்பட்டனர். குற்றப்புலனாய்வு பிரிவினர் பெற்றிருந்த பயிற்சிகள் வீணாக்கப்பட்டன. தற்போது ரிஷாட் பதியூதீனை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு முடியவில்லை. பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணியதாக கூறப்படும் ரிஷாட்டின் தம்பிக்கு பொலிஸார் பிணை வழங்கி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். தற்போது அவற்றை தடுப்பதற்கு எவராலும் முடியாது.
20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்திய 19 ஆவது திருத்தம் நீக்கப்படும் இந்நேரத்தில் 20 வது திருத்தத்தின் கீழ் கணக்காய்வு ஆணைக்குழு இல்லை என்று சமீபத்தில் இந்த நாட்டில் பாரிய சர்ச்சை ஏற்பட்டது. கணக்காய்வு ஆணைக்குழுவின் மூலம் மோசடி இல்லாத அளவிற்கு நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். இந்த ஆணைக்குழுவிற்கு அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகையையும் கூட கணக்காய்வு செய்ய அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழு ஜனாதிபதி மாளிகை அல்லது அலரி மாளிகையை கணக்காய்வு செய்ததா?
கடந்த காலங்களில் ஊழல் தடுப்பு குழுவை நடத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர். அந்தக் குழுவைப் பராமரிக்க ஐந்து ஆண்டுகளாக அலரி மாளிகையினால் நிறைய பணம் செலவிட்டன. அப்போதைய அட்டர்னி ஜெனரல் திணைக்கள அதிகாரிகள் கூட இந்தக் குழு சட்டவிரோதமானது என்று பகிரங்கமாகக் கூறியிருந்தனர். ஆனால் இந்த குழுவிற்கு செய்யப்பட்ட பெரும் செலவினங்களை சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழு கணக்காய்வு செய்துள்ளதா? அத்தகைய கணக்காய்வின் பின்னர் இந்த நாட்டிற்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா?
அது மட்டுமல்லாமல், சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழு இந்த நாட்டின் அமைச்சகங்களையேனும் முறையாக கணக்காய்வு செய்யவில்லை. புத்தசாசன அமைச்சின் கீழ் இருந்த மத்திய கலாசார நிதியிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழு கணக்காய்வு செய்துள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம்.
அதுமாத்திரமன்றி, இந்த சுயாதீன என்று கூறப்படும் கணக்காய்வு ஆணைக்குழு எந்தவொரு ஆணையத்தின் நடவடிக்கைகளையும் கணக்காய்வு செய்யவில்லை.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்துகிறார். உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்தும் போது, வாடகைக்கு தனியாக கட்டணம் பெற்றுக் கொள்ளப்படுகிறது. அவை நன்கு அறியப்பட்ட விடயங்கள். ஆனால் அவர்களில் யாராவது சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழுவால் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளார்களா? கணக்காய்வு ஆணைக்குழுவால் சுயாதீனமாக என்ன வேலை செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை அல்லது அலரி மாளிகையில் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளதா?
இந்த ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டதா? இந்த ஆணைக்குழுக்களினால் பொதுமக்கள் அதிகாரத்தை சுயாதீனமாக செயற்படுத்த அனுமதிக்கப்பட்டதா? அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர்கள். அவர்கள் நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறுபவர்களா? 19 வது திருத்தத்திற்கு இணங்க செயற்படுவதாயின் வாக்களித்து மக்கள் ஏன் நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து தேர்வு செய்கிறார்கள்?
நான் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தபோது ஒன்றன் பின் ஒன்றாக நாம் தேர்தல்களை நடத்தினோம். அந்த நேரத்தில் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் தொடர்ந்து தேர்தல்களை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அத்தகைய சூழ்நிலையில் தேர்தல்களை சுயாதீனமாக நடத்த ஒரு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமானதா? அதன் உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக அரசியலில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், தேர்தல்களை நடத்த வேண்டாம் என்று நீதிமன்றத்திற்கு செல்கிறார். அந்த செயற்பாடு சுயாதீனமானது என்பதை இந்த சபைக்கு ஏற்றுக்கொள்ள முடியுமா? ஒரு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு இருந்தபோதுதான் அரசாங்கத்தின் நிதியை செலவிட்டு ரிஷாட் புத்தளத்திலிருந்து மக்களை வாக்களிப்பதற்காக கிழக்கிற்கு அழைத்துச் சென்றார். மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை மாற்றியிருக்காவிடின், ரிஷாட் இன்றும் சுதந்திரமாக இருந்திருப்பார்.
ஜம்போ அமைச்சரவையை மினி அமைச்சரவையாக நியமித்துக் கொண்டோம் என்பது, 19 ஐ நிறைவேற்றிக் கொண்டவர்கள் பெருமையாக கூறிக்கொள்ளும் ஒரு விடயமாகும். 19 இல் அமைச்சர்களின் எண்ணிக்கை 30இற்குள் வரையறுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனினும் தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளுக்கு வரையறை இல்லை என்று. இந்த பிரிவை கொண்டு வந்த 19ஆவது திருத்தத்தின் கீழ் தான் இந்நாட்டில் அதிக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த பிரிவு காணப்படும்போது சுமார் 100 பேர் அமைச்சு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
20ஆவது திருத்தத்தை நாம் கொண்டுவருவது இந்த மோசடி மிகுந்த 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கே. அரசாங்கமொன்றை கொண்டு இயங்க மூன்றில் இரண்டு அவசியமில்லை. 115 வாக்குகள் இருப்பின் அரசாங்கமொன்றை கொண்டு செல்ல முடியும். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஏன் மூன்றில் இரண்மை கோரியிருந்தோம்? இந்நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க. தேசிய பாதுகாப்பை பாதுகாக்க. மீண்டும் அன்று காணப்பட்ட மரண அச்சம் இன்றி வாழக் கூடிய நாட்டை உருவாக்க.
இந்த பொது தேர்தலில் மாத்திரமின்றி கடந்த ஜனாதிபதி தேர்தலும் இந்த சபையில் தாக்கம் செலுத்தும். இவ்விரு தேர்தல்களின் மூலம் மக்கள் 19 ஐ நீக்குவதனையே எதிர்பார்க்கின்றனர் என்பது புலப்பட்டுள்ளது. நாட்டின் ஐக்கியம் ஜனாதிபதியின் மூலமே வெளிப்படும். ஜனாதிபதிக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு சட்டத்தின் கீழ் ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்த மக்கள் விரும்புகிறார்கள். அப்படியானால், இந்த சபை ஜனாதிபதியின் ஆணை குறித்தும் சிந்திக்க வேண்டும். எனவே, 20 ஐ கொண்டுவந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நாட்டை அராஜகப்படுத்தும் 19 ஐ தோற்கடிக்கப்படும்.