20ஆவது திருத்தச் சட்டம் ஆபத்தானதென தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்குபவர்கள் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தனர் என குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஒரு வருடத்தில் புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், ஏன் 20ஆவது திருத்தச்சட்டம் அவசரமாக நிறைவேற்றப்படுகிறது?. 19 இல் அதிகாரம் இழுபறி நிலையில் இருந்தது.
17,19ஆவது திருத்தச் சட்டங்களில் நிறைவேற்று அதிகரத்தை குறைப்பதாகவே கொண்டுவரப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த சந்தர்ப்பத்திலேயே இவை கொண்டுவரப்பட்டன. ஐ.தே.கவில் இருந்து ஜனாதிபதி ஒருவர் உருவாக முடியாது என்பதை அடிப்படையாக கொண்டே அவர்கள் இந்தத் திருத்தங்களை கொண்டுவந்தனர்.