சுவரில் ஊர்ந்து செல்லும் பல்லி பார்க்க சாதாரணமாக தெரிந்தாலும், மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது. சுற்றிலும் ஏதோ ஒன்று நடக்கப்போவதை நாய்கள் உணர்ந்துகொண்டு குரைப்பதைப் போல, பல்லி செல்லும் சயனத்திற்கும் பல அர்த்தங்கள் உண்டு. மனிதனின் உள்ளுணர்வோடு சம்பந்தப்பட்ட உணர்வுகள் பல்லியால் உணர்ந்துகொள்ள முடியுமாம். இதெல்லாம் முன்னரே தெரிந்தால் தானோ என்னவோ, பல்லி நம்முடைய உடல் மேல் விழுந்தால் கூட அதற்கு என்ன பலன் என்பதை பஞ்சாங்கத்தில் குறித்து வைத்துள்ளனர்.
பல்லிகள் மனிதர்களோடு இயைந்து வாழும் உயிரினமாகும். நாம் வாழும் முறையை அறிந்துகொண்டு, அதற்கேற்றார் போல தன்னை தகவமைத்துக்கொள்ளும். ஏழையின் குடிசையிலும் இருக்கும். பணக்காரன் வீட்டு ஹாலிலும் இருக்கும். இடத்திற்கு தகுந்தாற்போல இரையை தேடிக்கொண்டு, மனிதர்களோடு ஒன்றி வாழக்கூடியது. பல்லி வெறுமனே சுவரில் ஊர்ந்து செல்வதை மட்டுமே கவனித்திருப்போம். நன்கு உற்று நோக்கினால், பல வகைகளில் நமக்கு நன்மை தரக்கூடியது.
தீங்குவிளைவிக்கக்கூடிய, நச்சுத்தன்மை கொண்ட பூச்சிகளை பிடித்து தின்னும். அதனால் தான் பல்லி விழுந்த உணவு நஞ்சாக மாறலாம் என்று நினைக்கிறேன். ஒரு சிலருக்கு பல்லி அருவருப்பான உயிரினமாக தெரியும். அதனை வைத்து தவறு என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. வீட்டுப்பல்லியை போலவே, மரப்பல்லி என்ற ஒரு வகை பல்லி உண்டு. அது சிறிய தேளை கூட சாப்பிடும். ஒருமுறை பாட்டி வீட்டுக்கு போன சமயம், சுவர் ஓரமாக ஊரிக்கொண்டு வந்த சிறிய தேளினை பிடித்து சாப்பிட்டதை கண்டு வியந்துவிட்டேன்.
ஆன்மீகத்தில் பெருமாளுடன் நெருங்கிய தொடர்புடையது. மனித வாழ்வோடு இணைந்து நம்முடைய செயல்களின் சாட்சியாக அமைகிறது. வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நிலவினால், சயனம் சொல்லி எச்சரிக்ககூடியது. நம்முடைய மனசாட்சியாக விளங்குவதால், கடவுளுக்கு நிகராக அதனை மதித்தனர் நம் முன்னோர்கள். அதனாலேயே பல்லி என்று நேரடியாக அழைக்காமல், வேறு வேறு பெயர்கள் சொல்லி அழைத்தனர். சில குடும்பங்களில் இப்படிப்பட்ட நம்பிக்கை பெரியவர்கள் வாய்வழியாக வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.