ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் எவ்விதமான பிரிவுகளோ பிளவுகளோ ஏற்படப்போவதில்லை பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் கீழ் ஒன்றுபட்ட பயணம் தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டமொன்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அதேநேரம், எதிர்வரும் காலத்தில் முஸ்லீம் காங்கிரஸ் நடுநிலையான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் கட்சியின் உயர்மட்டத்தில் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது நாம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தோம். குறிப்பாக எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடுநிலையுடன் தொடர்ந்தும் செயற்படுவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சமுகம் சார்ந்து கட்சியின் தலைமையின் கீழ் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவடையும் என்றவாறான கருத்துக்கள் முழுவதும் உண்மைக்கு புறம்பானவை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக செயற்படவுள்ளோம் என்றார்.
இதேவேளை, 20ஆவது திருத்தச்சட்டத்திற்கான ஆதரவு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்தவர், 20ஆவது திருத்தச்சட்டத்திற்கான ஆதரவு தொடர்பில் நாம் தீர்மானம் எடுக்கின்றபோது, தலைமைக்கு அறிவிக்கப்பட்டது. சபையில் வைத்து தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு இறுதி நேரத்தில் எடுக்கப்பட்டது.
அதன் பின்னரே நான் உள்ளிட்ட உறுப்பினர்கள் சபையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தோம். நாம் ஆதரவு தெரிவிக்கப்போவதாக தலைமையிடம் தெரிவித்தபோது, சுயதீர்மானத்தின் பிரகாரம் வாக்களிப்பதற்கு தலைமையினால் இடமளிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















